2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாட்டை வெளிநாடுகளிடம் அடகுவைத்துள்ளனர்

Editorial   / 2022 ஜனவரி 11 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

“நாட்டை காக்க அதிகாரத்தைக் கோரியவர்கள், வெளிநாடுகளிடம் நாட்டை அடகுவைத்துள்ளனர்” என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்  மஹ்ரூப் தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள சீனக்குடாவில் நேற்று  (10) பிற்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மேலும் உரையாற்றிய எம்.பி,

“1924ஆம் ஆண்டு, எண்ணெய் தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 1930 அளவில் 101 எண்ணெய் தாங்கிகளும் பூரணமாக நிர்மாணிக்கப்பட்டன. சிட்னியை அடுத்து இரண்டாவது ஆழமான  இயற்கைத் துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் காணப்படுவதால், துறைமுகத்தை அண்டிய பகுதியில் இவை  நிர்மாணிக்கப்பட்டன.

“இதில் ஒரு தங்கியில் 12,000 டொன் எண்ணெய் சேமிக்க முடியும். மொத்தமாக 1.2 மில்லியன் டொன் எண்ணெய் சேமிக்க முடியும். இவற்றில் 15 தாங்கிகள் ஏற்கெனவே 2004 இல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது 24 தாங்கிகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் 61 தாங்கிகளை இந்தியா -இலங்கை ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்யும் முயற்சி எனும் பெயரில் இந்தியாவுக்கு விற்கும் ஒப்பந்தத்தை அரசு மேற்கொள்ளவுள்ளது.

“இந்த மொத்த தாங்கிகளிலும் 1.2 மில்லியன் எண்ணெய் சேமித்தால், நாளாந்தம் மில்லியன் டொலருக்கு அதிகமான வியாபாரம் செய்ய முடியும். எம்மால் தங்கத்தை விட பெரிய வியாபாரம் ஒன்றைச் செய்ய முடியும்.

“ஆனால், இதை இலங்கை அரசு வெறும் 500 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்கிறது. 1994  முதல் சுதந்திரக் கட்சி அல்லது பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஜனாதிபதிகளே இந்த நாட்டை ஆட்சி செய்கின்றனர். அவர்களால் எமது வளங்களை நிர்வகிக்க முடியவில்லை.

“நாட்டை வங்குரோந்து நிலைக்கு கொண்டு வந்து டொலர் தட்டுபாட்டை ஏற்படுத்தி, நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்களை அடிமட்ட விலைக்கு விற்கின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .