2026 மே 21, வியாழக்கிழமை

dd

04/21 தாக்குதல் ’’கேம்’’ அம்பலம் (முழு விபரம்)

Editorial   / 2026 மே 21 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாசூத்திரதாரி சுரேஷ் சலே:

சம்பவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்துள்ளனர் 
அஸாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் மூலம் வெளிப்பட்ட உண்மைகள் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு 
மனோஜ்ப்ரிய குணசேகர
 
அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், அதன் உண்மையான மகாசூத்திரதாரி (Mastermind) முன்னாள் அரச புலனாய்வுத் துறையின் (SIS) பிரதானி சுரேஷ் சலே என்றும், அதற்கான திட்டங்களை அவரே வகுத்தார் என்றும் அஸாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே அவர் நீதவான் திலான் அமுரசிங்கவிடம் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் நடந்த இரகசியச் சந்திப்பு

சம்பவம் நடந்த காலப்பகுதியில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

"கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் பிள்ளையானை விடுவிப்பதாக அவர்கள் அவரிடம் உறுதியளித்துள்ளனர்" என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர், இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்த சுரேஷ் சலே என்பவரை முழுமையான தேசிய பாதுகாப்புப் பிரிவின் பிரதானியாகவும், அரச புலனாய்வுத் துறையின் தலைவராகவும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் உண்மையான நோக்கம் என்ன?

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து கருத்துரைக்கையில் பின்வருவனவற்றை வெளிப்படுத்தினார்:

தேர்தலை இலக்கு வைத்த சதி: திட்டமிடப்பட்டிருந்த தேர்தலை இலக்கு வைத்து, நாட்டில் ஒரு பயங்கரமான பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவினர் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட திட்டங்கள்: ஆரம்பத்தில் வட மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமொன்றை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் ஒரு கூட்டுப் படுகொலையை அரங்கேற்றவோ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அத்திட்டங்கள் கைவிடப்பட்டு, சில மாதங்களில் வரவிருந்த தேர்தலைக் குறிவைத்து, சுரேஷ் சலேவின் வழிநடத்தலின் கீழ் உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதலாளிகளுடன் தொடர்பு: தாக்குதலை நடத்திய முக்கிய குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் குழுவினருக்கு சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினர் நிதியுதவி வழங்கியுள்ளதுடன், அவர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுரேஷ் சலேயின் தரப்பு வாதம்

இதேவேளை, சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கவிந்து பெர்னாண்டோ பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்:
 
சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அஸாத் மௌலானா வழங்கிய வாக்குமூலம் மற்றும் 'சனல் 4' (Channel 4) ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் நடக்கின்றன.
அரசியல் உள்நோக்கம் கொண்ட, நம்பகத்தன்மையற்ற ஒரு ஊடகத்தின் சாட்சியங்களை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.
தனது கட்சிக்காரரான சுரேஷ் சலேக்கு இத்தாக்குதலுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை.

நீதிமன்றத்தின் உத்தரவு

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலான் அமுரசிங்க, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 127ஆவது பிரிவின் கீழ் சந்தேகநபரான சுரேஷ் சலேயிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

மேலும், தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், ஜூலை மாதம் 1ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைகளைத் தொடருமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X