Editorial / 2021 ஜனவரி 18 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, நான்கு அம்சங்களை உள்ளடக்கி, தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நேற்று (17) திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அடங்கலாக 11 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
'ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல்' எனத் தலைப்பிட்டுள்ள அக்கடிதத்தின் பிரதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு ஆயத்தமாகும் இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், தமிழ் சிவில் அமைப்புகள் ஆகிய நாம் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.
ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காகக் கூடுகையில், இவ்வாறான முடிவெடுத்து இறுதித் தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும். இத்தீர்மானமானது, இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் போது, இழைக்கப்பட்ட இனப் படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும்.
பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டதென்றும், இதை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ, கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.
ஆகையால், 
1) இலங்கையை இனப்படுகொலை,மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக் கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று, இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
2) ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தலைவர், இவ்விடயத்தை மேலே கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
3) ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம்,  இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களைக் கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகம் ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.
4) மேலே '1' இல் கூறியதற்குப் பங்கமில்லாமல் ஐ.நா பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை (ஐஐஐஆ) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல் வேண்டும்.
'பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டு செல்லப்படல் வேண்டும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.
ஆகையால்,இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தீர்க்கமாகவும் காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்துகிறோம்' என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
10 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago