Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 06 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, 44 மேலதி வாக்குகளினால், எட்டாவது நாடாளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகராக, நேற்று (05) தெரிவு செய்யப்பட்டார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உள்ளிட்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களில் 16 பேர், அரசாங்கத்தை விட்டு விலகி, எதிரணியில் அமர்ந்துகொண்டனர். அதனையடுத்து, பிரதி சபாநாயகர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றம் நேற்று (05) ஒரு மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளவாறு, பிரதிச் சபாநாயகரும், குழுக்களின் தவிசாளரும் நியமிப்பதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அதனையடுத்து எழுந்த, ஐ.தே.கவின் எம்.பியான புத்திக பத்திரண, ஆனந்த குமாரசிறியின் பெயரை முன்மொழிந்தார். அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.
ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து எழுந்த எஸ்.பி.திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரடங்கிய அணியைச் சேர்ந்த, சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளையின் பெயரை முன்மொழிந்தார். அதனை ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார எம்.பி வழிமொழிந்தார்.
அதயைடுத்து, வாக்களிப்புக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. “பிரதி சபாநாயகரை தெரிவுச் செய்வதற்கு இரகசிய வாக்களிப்பு இடம்பெறும். வாக்குச்சீட்டில், பிரதி சபாநாயகராக யாரைத் தெரிவு செய்ய விரும்புகின்றீர்கள் என அவரின் பெயரை எழுதி, அதன் கீழ், வாக்களிப்பவரின் பெயரை எழுதி, கையொப்பமிடவேண்டும்” என, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
இதனிடையே எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, இரசிய வாக்களிப்பு என்கின்றீர்கள், பெயரை எழுதுமாறு அறிவுறுத்துகின்றீர்கள். பெயரை எழுதினால், அது எப்படி இரகசிய வாக்களிப்பாகும் எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், கருத்துரைத்த சபாநாயகர், “இரகசிய தன்மையை நான், பாதுகாத்துக்கொள்கின்றேன். விதிமுறைகளின் பிரகாரமே வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது” என்றார்.
இந்நிலையில், எழுந்த எதிர்க்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், “பிரதிச் சபாநாயகராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வேட்பாளரே தெரிவு செய்யப்படவேண்டும்” என்றார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “தேசிய அரசாங்கமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நபர்கள் பிரதி சபாநாயகராக ஒருவரை தெரிவதும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சபாநாயகரை தெரிவு செய்வது என்ற இணக்கப்பாடு இருந்ததை மறுக்கவில்லை. ஆனால் இந்த இரண்டு பதவிகளும் அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய பதவிகள்” என்றார்.
அதற்கிடையில், வாக்கைப் பதிவுசெய்வதற்கு, மறைக்கப்பட்ட திரைகள் அடங்கிய கூடு கொண்டுவரப்பட்டது. சகலரும் பார்க்கும் வகையில், சபைக்கு நடுவே, வாக்குப்பெட்டி வைக்கப்பட்டது.
அறிவுறுத்தல்களுக்குப் பின்னர், திறந்த வாக்குப்பெட்டி, சகலருக்கும் பகிரங்கமாகக் காட்டப்பட்டது. அதன்பின்னர், அப்பெட்டிக்கு சீல்வைக்கப்பட்டது.
அதனையடுத்து, பிற்பகல் 2:53 க்கு வாக்களிப்பு ஆரம்பமானது. பெயர் குறிப்பிட்டு வாக்களிப்பு நடத்தப்பட்டது. அதனால், மாலை 4:53க்கே வாக்களிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், பெயர் குறிப்பிடும் போது, ஆசனத்தில் இருக்காத உறுப்பினர்களுக்கு, வாக்களிப்பின் நிறைவில் சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டது.
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜே.வி.பியினர், வாக்களிப்பில் கலந்துகொள்ளாது, சபையை விட்டு வெளியேறிவிட்டனர். ஒன்றிணைந்த எதிரணியில், பெரும்பாலான உறுப்பினர்களை காணக்கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பி, வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் 224 பேரில், 151 பேர் மட்டுமே வாக்களிப்பில் கலந்துகொண்டனர். அதிலும் ஒரு வாக்கு செல்லுபடியற்ற வாக்காகும்.
அளிக்கப்பட்ட 151 வாக்குகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளை, 53 வாக்குகளைப் பெற்றார்.
அதனடிப்படையில், 44 மேலதிக வாக்குகளினால், ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.
வாக்களிப்பு யாவும், மாலை 4:53க்கு நிறைவடைந்ததன் பின்னர், பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன. அதனையடுத்து, பிரதிச் சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்ட இருவரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். முன்னாள் பிரதிச் சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் தன்னுடைய நன்றியறிதலைத் தெரிவித்தார்.
இதேவேளை, கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த வாக்களிப்பு, பக்கச்சார்ப்பின்றி, நீதியாகவும் நேர்மையாகவும் நடந்தது எனவும் அதில் பங்கேற்ற சகலருக்கும் நன்றியையும் தெரிவித்தார். அதனையடுத்து சபை நடவடிக்கைகள் அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.
‘பக்கச்சார்பின்றிச் செயற்படுவேன்’
தன்னைப் பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்வதற்கு வாக்களித்த சகல உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, முன்பிருந்த பிரதிச் சபாநாயகர்களைப் போல், பக்கச்சார்ப்பின்றிச் செயற்படுவேன் என்றார்.
இரகசிய வாக்களிப்பு நிறைவடைந்து, பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்துக்கு என்னை அனுப்பிய மொனராகலை மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
‘பெண்கள் தோற்றுவிட்டனர்’
பிரதி சபாநாயகருக்கான தேர்தலில் போட்டியிட்ட நான், தோல்வியடையவில்லை எனத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, இதில், நான் தோல்வியடைய வில்லை. பெண்களே, தோற்றுவிட்டனர் என்றார்.
இரகசிய வாக்களிப்பு நிறைவடைந்து, பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பிரதி சபாநாயகராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கவேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். அந்த வகையில், என்னுடைய பெயர், முன்மொழியப்பட்டது. அதில், நான் தெரிவு செய்யப்பட்டிருந்தால், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட, பெண் பிரதி சபாநாயகர் என்ற நாமத்தை பெற்றிருப்பேன்” என்றார்.
“இதில், சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளை என்றவகையில் நான் தோற்றுப்போகவில்லை. பெண்களே தோற்றுவிட்டனர்” என்றார்.
44 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
47 minute ago
1 hours ago