2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

‘தமிழ் மக்களை ஒருபோதும் கைவிடேன்’

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 06:25 - 1     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டில், மூவின மக்களும் சமவுரிமையுடன் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டுமெனில், தேசிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் இதை, புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுவே தனது பிரதான கடமையென்றும் கூறியுள்ளார்.  

அத்துடன், தான் மீண்டும் பிரதமராகக் காரணமாக தமிழ் மக்களுக்கு, என்றும் தான் நன்றியுடையவனாகவே இருப்பதாகவும், தன்னை நம்பும் அவர்களை, தான் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். 

நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அதில் தொடர்ந்து கூறியுள்ள பிரதமர், புதிய அரசமைப்புக்கு எதிராகக் கூக்குரலிடுபவர்கள்; உத்தமர்கள் அல்லரென்றும் அவர்கள், இந்த நாட்டை நாசமாக்கியவர்கள் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொலைகாரர்கள், ஊழல்வாதிகள், குடும்ப ஆட்சிக்காக நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, கடந்த காலங்களில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்களின் அச்சுறுத்தல்களுக்கு, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அடிபணியாது, புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருமெனக் கூறியுள்ளார்.   அரசியல் சூழ்ச்சியை முறியடித்து, தான் மீண்டும் பிரதமராவதாக, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பினார்கள் என்றும், அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் கூறியுள்ளதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடனேயே, தான் மீண்டும் பிரதமரானதாகவும் கூறியுள்ளார்.  

தான் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஆற்றிய உரையின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேனெனக் கூறியுள்ள பிரதமர், வாக்குறுதிகளிலிருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும், நாட்டைப் பிளவுபடுத்தாமல், ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவதாகவும், மீண்டும் ஒரு குடும்ப ஆட்சிக்கும் சர்வாதிகார ஆட்சிக்கும் இடமளிக்க மாட்டோமென்றும், மேலும் தெரிவித்துள்ளார்.    


  Comments - 1

  • கிருவை Tuesday, 15 January 2019 10:04 AM

    சர்வதேச ஊடகத்துக்கே சொல்லியது. உள்ளூர் ஊடகத்துக்கல்ல. அமெரிக்க நலன்கள் ரணிலால் பாதுகாக்கப்படுமாயின் சர்வதேசம் தமிழர் பாடுகளை கவனிக்காது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X