Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை நான் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கோட்பாடுகளின் வழிநின்று எமது இனத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையை வென்றெடுத்து மேன்மையை அடைவதற்கு, மனித உரிமைகளை மதித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்க்க, இந்தக் கட்சிப் பயணம் உறுதுணையாக அமையும். இதற்கு 'தமிழ் மக்கள் கூட்டணி' (Thamizh Makkal Kootanii – TMK) என்ற காரணப் பெயரை இட்டுள்ளேன் என்றார்.
தமிழ் மக்கள் பேரவை விசேட பெருங் கூட்டம், நல்லூர் நடராஜா பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கத்தில், தமிழ் மக்கள் பேரவையினூடாக உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
“சிங்கள அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளுக்கும் பூர்வீகக் குடிகள் என்ற அடிப்படையில் 'தமிழர்' என்ற அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டான தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளுக்கும் இடையில் அன்று முதல் உருவான 'சிங்கள- தமிழ்' இன முரண்பாட்டு நிலை அடுத்துவரும் 2019ஆம் ஆண்டில் 100 வருடங்களை எட்டப்போகின்றது. தமிழ் மக்களின் இந்த 'சுய பாதுகாப்பு' போராட்டமானது ஓர் அஞ்சல் ஓட்டமாக தந்தை செல்வா வழியாக முன்னெடுக்கப்பட்டது.
“சுய பாதுகாப்புப் போராட்டத்தில் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட எண்ணற்ற வன்முறைகள், அரசியல் பாகுபாடுகள் மற்றும் இறுதியாக 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 'இன அழிப்பு யுத்தம்' ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்துக்கும் அதிகமான எமது மக்களை நாம் இழந்துள்ளோம். பல ஆயிரம் உயிர்களைத் தியாகம் செய்துள்ளோம்.
“ஓர் இனத்துக்கும் ஒரு மதத்துக்கும் முதன்மை என்ற நிலை இருக்கும் வரை பாரிய முரண்பாடுகள் இந்நாட்டில் இருந்து கொண்டேயிருக்கும். பாகுபாடுகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான எமது சுய பாதுகாப்புப் போராட்டம் வன்முறை வழிகளில் அடக்கப்பட்டமையும் தொடர்ந்து அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு நாம் ஏமாற்றப்பட்டமையுமே இளைஞர்கள் மத்தியில் விரக்தி நிலையை ஏற்படுத்தி, அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடக் காரணங்கள் ஆகின என்பது வரலாறு.
“தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு விட்டதாக எவரேனும் கருதினால் அது முட்டாள்தனமான கருத்தாகவே நோக்கப்பட வேண்டும். 30 வருட காலமாக நீடித்த தேசிய இனப் பிரச்சினைக்கான சமாதானத் தீர்வுத் திட்டமே தற்போது விஞ்சி நிற்கும் தேவை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடுமையான நோயின் நோய்க்குறிகள் மட்டுமே. இன்னமும் நோய்க்கான மருந்து வழங்கப்படவில்லை.
“இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பமாக 'நல்லாட்சி' இதயசுத்தியுடன் செயற்படவில்லை. ஆகக்குறைந்தது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வினைத்திறனான ஒரு பொறிமுறையைக்கூட ஏற்படுத்த அவர்கள் முயலவில்லை.
“அதிகாரமற்ற வட மாகாண சபை ஊடாக எமக்கு ஒதுக்கப்பட்ட சிறிய அளவிலான நிதியைப் பயன்படுத்தி எம்மால் முடிந்தளவுக்கு எமது மக்களின் துயர் துடைக்கும் பணியைச் செய்துள்ளோம்.
“தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இடைக்காலத்தில் இருந்தபோது 1987ஆம் ஆண்டு எம் மீது திணிக்கப்பட்ட ஒரு தீர்வு முறைமையே இந்த மாகாண சபைக் கட்டமைப்பு. பலவீனமான, அதிகாரம் அற்ற இந்த கட்டமைப்பு, இனப்பிரச்சினைக்கான ஓர் ஆரம்பப் புள்ளியாகக் கூட இருக்க முடியாது என்று எங்கள் தமிழ்த் தலைவர்கள் அன்றே நிராகரித்துவிட்டார்கள். அதன் பின்னர் இனப்பிரச்சினை மேலும் சிக்கலடைந்து, ஓர் இன அழிப்பு யுத்தத்தில் முடிவடைந்தது.
“வட மாகாண சபையைக் கைப்பற்றிவந்தபின் நாம் எதுவும் செய்யவில்லை என்று கொக்கரிப்போர் யார் என்று பார்த்தால் 'பிழையானவர்கள் கைகளுக்கு செல்லக்கூடாது' என்று யாரை அன்று அடையாளப்படுத்தினோமோ அவர்களே அரசாங்கத்துக்கு மண்டியிட்டு அல்லது பிச்சை கேட்டு ஏன் உங்கள் காரியங்களை நீங்கள் இயற்றவில்லை என்றே கேட்கின்றார்கள்.
“எமக்கு எமது உரிமைகள் முக்கியம். எமது வருங்கால நிரந்தரத் தீர்வு அவசியம். இன்றைய ஒரு அடிமைப்பட்ட சொகுசு வாழ்க்கையல்ல.
“தீர்வு முயற்சியில் உண்மையான அக்கறை கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் உண்மையான கரிசனை கொண்டிருந்தால் அதிகாரங்கள் கொண்ட 'இடைக்கால நிர்வாகத்தை 'அரசாங்கம் யுத்தம் முடிந்தகையோடு ஏற்படுத்தியிருந்திருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
“முதலமைச்சர் நிதியத்தை வழங்குங்கள் என்று அரசாங்கத்துக்குக் கூற வக்கில்லாதவர்களே கரவு முயற்சிகளில் எம்மை ஈடுபடச் சொல்கின்றார்கள்.
“ஆவாக் குழு போன்ற வன்முறை குழுக்களை 3 மாதங்களுக்குள் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என்று ஆளுநர் பிரித்தானியாவில் வைத்துத் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகிறது. ஆளுநரால் 3 மாதங்களுக்குள் ஆவாக் குழுவை இல்லாமல் செய்ய முடியும் என்றால் ஏன் அதனை அரசாங்கம், ஆளுநர் ஊடாகக் கடந்த 5 வருடங்களில் செய்யவில்லை? அல்லது ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் ஆவா குழுவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.
“ஒரு புறம் வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த அதேவேளை, மறுபுறம் சிங்களக் குடியேற்றத் திட்டங்களையும் பௌத்த மயமாக்கலையும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புகள் மத்தியிலும் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வந்துள்ளது. இதற்கு ஆளுநர் உடந்தையாக இருந்துள்ளார்.
“இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற மறுத்து வருவதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதிலும் அசட்டையீனமாக இருந்துவருகிறனர் அரசாங்கமும் ஆளுநரும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் இப்படி இருக்கும்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்போ இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசு என்று சர்வதேச சமூகத்துக்கு நற்சான்றிதழ் கொடுத்துவருவதுடன், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்றும் ஏமாற்றி வருகிறது. முதலில் 2016 என்றார்கள். பின்னர் 2017 என்றார்கள். இப்பொழுது 2018 என்கின்றார்கள். விந்தையிலும் விந்தை இந்தச் செயல்.
“எனது முதலமைச்சர் பதவிக் காலத்தின் பின்னர் எனது செயற்பாடுகள் எப்படி இருக்கமுடியும் என்பது தொடர்பில் 4 தெரிவுகள் இருப்பதாகக் கூறிவந்தேன்: 1. அமைதியாக வீட்டுக்குச் செல்லுதல் 2. ஒரு கட்சியுடன் இணைந்து, தேர்தலில் நிற்பது 3. ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து செயற்படுவது. 4. ஒரு மக்கள் இயக்கத்துக்குத் தலைமை தாங்குவது, என்பவையே அவை.
“முதலாவது வழியை நான் தெரிவு செய்தால் ஓர் இடர் நிலையில் இருந்து காப்பாற்றிய எம்மக்களுக்கு 'நான் உங்களுடன் இருப்பேன்' என்று அன்று கூறிய வாக்கு பொய்த்துவிடும். அதனால் இத்தகைய ஒரு தெரிவை என்னால் எடுக்க முடியவில்லை.
“நான் எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவன் அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராகவே கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால், என்னை ஒரு பொம்மையாக வைத்து அரசியலை நடத்துவதற்கு அதன் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கு என்னால் இடமளிக்கமுடியவில்லை. எனக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைக்கும் இடையே கடந்த 4 வருடங்களில் இடைவெளி பெரிதும் அதிகரித்துள்ளது. ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிடுவதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
“கொள்கையில் திடமாக இல்லாது முன்பு 'துரோகிகள்' என்று வர்ணித்தவர்களின் வழித்தடத்திலேயே இப்பொழுது பயணம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எனக்கென்ன வேலை என்று கேட்டு அவர்கள் வாய்களை அடைத்துவிட்டேன். அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்ற ஒன்று.
“தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் இணைந்து போட்டியிடுவது எமக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைந்துவிடும். 'ஏன் இந்தக் கட்சி?' 'மற்றக் கட்சி கூடாதா?' என்றெல்லாம் போட்டியும் பொறாமையும் மேலோங்கும். ஆகவே, இரண்டாவது தெரிவும் சாத்தியம் அற்றது.
“எனது தனிப்பட்ட நலனில் அக்கறைகொண்ட நண்பர்கள் பலரும் நான் முதலாவது தெரிவை அல்லது நான்காவது தெரிவையே எடுக்க வேண்டும் என்றே ஆலோசனை கூறி வந்துள்ளார்கள். மக்கள் இயக்கப் போராட்டங்கள், சாத்வீகக் கோட்பாடுகளின் அடிப்படையிலானவை. சாத்வீக வழிமுறைகளில் ஆரம்பித்து வன்முறைகளால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமே இன்று அரசியல் ராஜதந்திரப் போராட்டமாக பரிணாமம் பெற்றுள்ளது.
“அன்றைய தேர்தல் காலத்தில் இந்த வாக்குறுதிகள் சாத்தியமானவைகளாகத் தெரிந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு புதிய ஆட்சிமாற்றத்துடன் புதிய பதவிகள், சலுகைகள் வந்துசேர அவை சாத்தியம் அற்றவைகளாக மாறிவிட்டன. நான் முன்னர் குறிப்பிட்டதுபோல நல்லாட்சி அரசாங்கம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையிலும், அதற்கு முண்டுகொடுத்து இந்த அரசாங்கம் எமக்கு தீர்வைத் தரும் என்று கூறிவருகின்றனர். தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகக் கூட சிங்கள குடியேற்றங்களையும் பௌத்தமயமாக்கலையும் தற்காலிகமாகக் கூட நிறுத்திவைக்க விரும்பாத இந்த அரசாங்கம், எப்படி எமக்குத் தீர்வை வழங்கும் என்று சிந்திக்க முடியாதளவுக்குப் பதவிகளும் சலுகைகளும் அவர்களின் கண்களை மறைத்து வருகின்றன.
“வராது என்று தெரிந்திருந்தும் வராத ஒரு தீர்வுத்திட்டத்துக்காக 'ஒற்றை ஆட்சி' முறையை ஏற்றுக்கொண்டு, 'இலங்கை ஒரு பௌத்த நாடு' என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இவர்கள் இதற்கான மக்கள் ஆணையை எந்தத் தேர்தலில் இருந்து பெற்றுக்கொண்டார்கள் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விளக்கவேண்டும் அல்லது எதிர்வரும் தேர்தல்களில் இவற்றை மக்கள் முன்பு வைத்து ஆணையைப் பெறவேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஓர் கூற்று அரசியலில் மறு கூற்று என்றிருப்பது எம்மக்களை ஏமாற்றுவதாகவே முடியும்.
“இராணுவம் முற்றுமுழுதாக வட, கிழக்கு மாகாணங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று எமது மக்கள் வலியுறுத்தும்போது தனியார் காணிகளிலிருந்து அவர்கள் வெளியேறினால் அதுவே போதும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர் தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். வட, கிழக்கில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்று அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச சமூகத்திடமோ கோர அவர்கள் அஞ்சுகின்றனர். மடியில் கனம் இருப்பதால்தான் அவ்வாறு அஞ்கின்றனர் போலும்!
“இராணுவம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு எமது மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட சொற்ப மீள்குடியேற்ற நிதியை, இராணுவம் வேறிடத்தில் முகாம் அமைப்பதற்குச் செலவாக வழங்கும் வினோதம் இங்குதான் இடம்பெறுகிறது.
“மன்னார் ச.தொ.ச வளாக மனிதப் புதைகுழியில் இன்றுவரை குழந்தைகள் உட்பட எடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை இருநூறை எட்டியுள்ளது. அதேபோல, வேறு பல இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சரியான முறையில் முகாமைப்படுத்தி சர்வதேசத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கு எமது தலைவர்களுக்கு வக்கில்லை. அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் சலுகைகளுக்கும் சொகுசுகளுக்கும் அடிமைப்பட்டு விட்டார்கள்.
“குறைந்த பட்சம் இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவின் ஊடாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகத் தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுவிக்க முடிந்திருக்கின்றதா? அரசியல் சாணக்கியம் பற்றி அடிக்கடி குறிப்பிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்றத்தில் வைத்துக்கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஏன் இதுவரை எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. ஆகக்குறைந்தது வரவு - செலவுத் திட்டத்தைக் கூட சாதகமாக பயன்படுத்தி, கைதிகளின் விடுதலைக்கு முயற்சி செய்யாமல் அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டங்களுக்கு ஆதரவாக, தவறாமல் வருடா வருடம் வாக்களித்து வருகின்றார்கள். இவர்களின் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையிலேயே, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எமது பல்கலைக்கழக மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளையும் இடைநிறுத்தி வீதியில் இறங்கிப் போராடும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
“போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச மனித உரிமைகள் சபையின் கோரிக்கையை மேலும் பலப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கான காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. கால இழுத்தடிப்புகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போகின்றது என்பதுதான் யதார்த்தம்.
“எனவேதான், அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து, தமிழ்த் தேசியக் கோட்பாடுகளின்பால் பற்றுறுதியுடன் இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்கும் மூன்றாவது தெரிவே சிறந்ததும் அவசியமானதும் என்று உணர்கின்றேன்.
“தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை நான் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டேன். தமிழ்த் தேசியக் கோட்பாடுகளின் வழிநின்று, எமது இனத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையை வென்றெடுத்து, மேன்மையை அடைவதற்கு, மனித உரிமைகளை மதித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்க்க, இந்தக் கட்சிப் பயணம் உறுதுணையாக அமையும். இதற்கு 'தமிழ் மக்கள் கூட்டணி' (Thamizh Makkal Kootanii – TMK) என்ற காரணப் பெயரை இட்டுள்ளேன்.
“என் அன்புக்குரிய மக்களே! இது எனது கட்சி அல்ல. இது உங்களின் கட்சி. நீங்கள் வளர்க்கப்போகும் கட்சி. காலத்தின் அவசியத்தால் உதயமாகும் கட்சி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக இதுகாறும் நடந்திருந்தார்களேயானால் நான் ஓய்வு பெறப் போயிருப்பேன். ஒரு கட்சியை உருவாக்க என்னைக் கட்டாயப்படுத்தி விட்டார்கள் கூட்டமைப்பினர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலும் கூறு போட நான் விரும்பவில்லை. எனது குறிக்கோள்கள் சரி என்றால் மக்கள் என் பக்கம் சார்வார்கள். இல்லையேல் என்னை ஒதுக்கி விடுவார்கள். அது மக்களின் விருப்பம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago
2 hours ago
4 hours ago