2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

Editorial   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவரை கைது செய்து அவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன், அந்நபரின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார் என தீர்மானித்த உய​ர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து நஷ்டஈட்டை வழங்குமாறு, உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் எஸ்.துரைராஜா இந்த தீர்ப்பை வழங்கினார்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர், மிரிஹான பொலிஸ் நிலையத்தில் 2010 ஆம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது. அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  சட்டவிரோதமாக கைதுசெய்து, தடுத்துவைத்து, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக, மனுதாரரான டபிள்யூ.ரஞ்சித் சுமங்கல தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் வைத்தே மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசபந்து தென்னகோன் உட்பட, சம்பவத்துடன் தொடர்புடைய  அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சரிதா டி பொன்சேகா மற்றும் திலினி விதானகமகே ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியாவும் பதில் பொலிஸ்மா அதிபர் தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி இந்துனி புஞ்சிஹேவாவும் ஆஜராகியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .