Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் முதல் தொகுதி வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதன் ஏனைய தொகுதிகள் இன்னும் மறைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்ட கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி எப்போது கிடைக்கும் என்றும் கேள்வியெழுப்பினார்
உயிர்த்த ஞாயிற்று தாக்குதலின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், நாட்டின் பல பாகங்களும் இடம்பெற்றன. இதன், பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் முற்பகல் 9.00 மணிக்கு நடைபெற்றது. உயிர்த்த ஞாயிற்று தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. அதன் பின்னர், அங்கு உரையாற்றிய ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை,
இந்த பயங்கரமான சம்பவம் குறித்த உண்மையும் நீதியும் எப்போது நிலைநாட்டப்படும் என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெற்ற இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்கள் என்பதால், இதற்குப் பின்னால் உள்ள சக்திகளைக் கண்டறிவது பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் எமது அடிப்படை உரிமையாகும். 2019ஆம் ஆண்டு முதல் இருந்த அரசாங்கங்கள் இந்த உண்மைகளைக் கண்டறிய காட்டிய ஆர்வம் மிகக் குறைவாகும் என்றார்.
கடந்த கால ஜனாதிபதிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர்கள், தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெறக்கூடிய குழுக்களை நியமிப்பதன் மூலமும், தற்காலிக தீர்வுகளைக் கூறி உண்மைகளை மறைப்பதன் மூலமும் விசாரணைகளைச் சீர்குலைக்க முயன்றனர். 2024ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இது குறித்து ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தாலும், சில அரச அதிகாரிகள் அந்தப் பயணத்திற்குத் தடையாக இருக்கின்றனர் என்றார்.
உதாரணமாக, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், கடமையைச் செய்யத் தவறிய பாதுகாப்பு அமைச்சின் மற்றும் பொலிஸின் சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் இன்னும் காலதாமதம் செய்து வருகிறது. இதற்கிடையில், குறிப்பாக இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்ட தகவல்கள் மற்றும் தற்போதைய விசாரணைகளால் சில அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளனர். தங்களின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில், அவர்கள் விசாரணைகளைச் சீர்குலைக்கப் பலவீனமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றால், தராதரம் பார்க்காமல் எவரையும் அழைத்து விசாரணை நடத்துவதில் தவறில்லை என்றார்.
இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சில அரசியல் சக்திகள், விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிப்பது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் இன்றும் மிகுந்த வேதனையை அனுபவித்து வருகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணைகள் அமையக் கூடாது; இந்த படுகொலைகளுக்குப் பின்னால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யார் இருந்தாலும் அவர்களைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அனைத்து உண்மைகளையும் ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களோ, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களோ அல்லது பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களோ, இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை. பாதுகாப்புப் படையில் இருந்தவர்கள் குற்றம் செய்திருந்தால், அதற்காக அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதைத் தடுக்க முடியாது. அத்தகையவர்கள் மற்றவர்களை விட முன்மாதிரியாக வாழ்ந்திருக்க வேண்டும். எனவே, எத்தகைய பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும், சந்தேக நபர்களைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதில் தவறில்லை என்றார்.
பாதுகாப்புப் படையில் இருந்தவர்கள் அல்லது 'ரணவிரு' (யுத்த வீரர்கள்) என்று அழைக்கப்படுபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கும் சட்டம் சமமாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தங்களுக்கு நெருக்கமானவர்களைக் காப்பாற்றுவதற்காக 'ரணவிரு' என்ற முத்திரையைப் பயன்படுத்துவது மிகவும் இழிவான செயலாகும். 2024 அக்டோபர் 6 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கட்டுவாபிட்டி தேவாலயத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி, ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகள் மறைந்து போக அவர் அனுமதிக்கக் கூடாது.6 உண்மைகளின் அடிப்படையில் ஒரு முழுமையான, வெளிப்படையான விசாரணையை நடத்தி, அதன் முடிவுகளை வெளிப்படுத்துமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

24 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
53 minute ago