2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பலாலி விமான நிலைய செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கவும்: பிரதமர்

Freelancer   / 2022 ஜூன் 14 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இலங்கை, சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் வருமானம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுற்றுலாத்துறையின் பங்குதாரர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (14) கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டளவில்  2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டக்கூடிய மற்றும் சுமார் 1.5 மில்லியன் உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

விருந்தோம்பல் துறையில் பல ஊழியர்கள் தொழிலை கைவிட்டதாலும், ஹோட்டல் பாடசாலைகளில் சேர்வதும் வெகுவாக குறைந்துள்ளதாலும் இளைஞர்களை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துமாறும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் கலாச்சாரத்தில் தங்களை மூழ்கடிக்கவும் வாய்ப்பளிக்கும் கலாச்சார விழாக்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பிரதமர் கலந்துரையாடினார்.

உலகெங்கிலும் உள்ள அதிகமான எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் காலி இலக்கிய விழாவை மேம்படுத்துவதற்கான பணிகளை ஆற்றுமாறு பிரதமர் அரச சுற்றுலா அதிகாரிகளை வலியுறுத்தினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .