2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பிரதமரின் செயலாளரின் போலி கணவன் கைது

Editorial   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தனிப்பட்ட செயலாளரின் கணவர் எனத் தன்னைக் காட்டிக்கொண்டு, கொழும்பு - பொரள்ளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள முயன்ற சந்தேக நபர் ஒருவரை, கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று (21) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தன்னை இலங்கை விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ (Wing Commander) எனப் பொய் கூறி பாடசாலை அதிபரை அணுகியுள்ளார். கடந்த சுதந்திரத் தின விழாவின்போது தான் வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்ததாகவும் கூறி அதிபரின் நம்பிக்கையை வெல்ல முயற்சி செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், விமானப்படை அதிகாரிகள் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றும் தனது மனைவி எனக் கூறி, ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கி அவற்றை அதிபரிடம் காண்பித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) வீடுகள் தேவைப்படுபவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக ஐந்து வீடுகள் தனது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு வீடுகளை அதிபருக்குப் பெற்றுத் தருவதாகவும் கூறி அதற்கான விண்ணப்பப் படிவங்களையும் சந்தேக நபர் அதிபரிடம் வழங்கியுள்ளார்.

எனினும், குறித்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் பாடசாலை அதிபர் இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், அத்தகைய பெயரில் தனிப்பட்ட செயலாளர் எவரும் அங்கு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு தெற்குப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷான் சூரியபண்டாரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இதற்கு முன்னரும் போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானவர் என்பதும், அவர் மீது சுமார் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கொழும்பு தெற்குப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷான் சூரியபண்டாரவின் ஆலோசனையின் பேரில், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் பிரியந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .