2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

புதிய பொருளாதார திட்டம் ஜனவரி ஆரம்பம்

Editorial   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார0 வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எனவே, புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

கோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று (06) இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

18 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர் சமூகம் மேற்கொண்டுள்ள பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊழியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசில்கள் வழங்கி வைத்ததுடன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.25 பெறுமதியான நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் அட்டையும் வெளியிடப்பட்டது.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பாடல் மற்றும் கொடி என்பனவும் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் “ஈ மதிப்பீடு” முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சொத்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மத்திய வங்கி ஏற்கனவே பணம் அச்சிடுவதை நிறுத்திவிட்டது. அத்துடன் அபிவிருத்திக்காக அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் இல்லாமல் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியாது.

சுற்றுலாத் துறையின் மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். அடுத்த ஆண்டு ரூ.25 லட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சமாக உயர்த்தினால் இந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைப் பெற முடியும் என நம்புகின்றோம்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 இலட்சம் ஏக்கர் நிலத்தை மக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதில் மதிப்பீட்டுத் துறைக்கு பெரும் பங்கு உள்ளது.

எரிசக்தி துறையிலும் புதிய அணுகுமுறைகள் அவசியம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். காற்றாலை மூலம் 35 கிகாவோர்ட்டும், சூரிய சக்தி மூலம் 200 கிகாவோர்ட்டும் மின் உற்பத்தி செய்ய முடியும். இந்த நாட்டில் நுகர்வுக்கு 50 கிகாவோர்ட்டினை விட குறைவாகவே மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, எரிசக்தி துறையின் ஊடாகவும் அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். செயற்கை நுண்ணறிவு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டு, டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X