Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 07 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பை தயாரிக்கும் பணிகள் தோல்வியடையுமாயின், அது நல்லிணக்கத்துக்கான தோல்வியாகவே அமையும்” என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான, எம்.ஏ.சுமந்திரன், “அரசமைப்பைத் தயாரிக்கும் பணிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கக் கூடாது, பின்வாங்க வேண்டிய அவசியமும் கிடையாது அத்துடன், தடங்கல் வரும்போது புறமுதுகிட்டு ஓடிவிடாமல் மக்களால் கொடுக்கப்பட்ட ஆணைக்கு அனைத்து மக்களின் உரிமைகளையும் நினைவில் கொண்டு சமூக ஒப்பந்தமான அரசமைப்பை உருவாக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
“இரண்டு பிரதான கட்சிகளும், இணைந்திருப்பது இதுதான் முதல்தடவையாகும். அரசமைப்பை தயாரிக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு பாடுபடவேண்டும். பொறுப்புடன் செயற்படவேண்டும். அதில், வெற்றிக்கான வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதால் காட்சிமாற்றங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆட்சிமாறினாலும் காட்சி மாறவில்லை என, எம்மில் பலர் கூறி வருகின்றனர். அந்த கருத்தை இல்லாமல் செய்யவேண்டும்.
“நாட்டில் என்ன நடக்கவேண்டும் என்பதை நான்கு பேர் சேர்ந்து தீர்மானித்தால், நாடாளுமன்றம் எதற்கு நாடாளுமன்றம், சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடம். இதற்கு மேலாக எவரும் இருக்க முடியாது.
“அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என, அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெட்டத்தெளிவாக அறிவித்திருப்பது நல்ல விடயமாகும்.
“இந்த அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் செயற்படவேண்டும். புதிய அரசமைப்பைக் கொண்டுவந்தே தீருவோம் எனக் கூறுவது நல்லவிடயம். இதற்கமைய செயற்படுவது அவசியம். கடந்த ஒன்றரை வருடங்களாக வெவ்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி முதற்தடவையாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சமூக ஒப்பந்தத்தை அல்லது அரசமைப்பைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வலுக்கட்டாயமாகக் காணாமல் போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாய சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் வாங்கவில்லை. பிறிதொரு தினத்தில் அதனை விவாதத்துக்கு எடுக்கும் என சபை முதல்வர் கூறியுள்ளார்.
“இது முக்கியமானதொரு சட்டமாகும். இந்த சட்டமூலத்தை சமர்ப்பிப்பதிலிருந்து அரசாங்கம் ஏன்? பின்வாங்கியது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
குறிப்பாக சமயத் தலைவர்கள் சொல்லிய பின்னர் அரசாங்கம், இதனை மீளப்பெற்றதா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. இந்த சந்தேகம் அடிப்படையாக இருக்குமானால் நாடாளுமன்றம் தேவையில்லை” என்றும் சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.
“நல்ல சிந்தனையோடு முற்போக்குச் சிந்தனையோடு அமைந்த தேசிய அரசாங்கத்தின் ஒரே நோக்கம் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். பணியில் நாம் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பல தாமதங்கள், இடையூறுகள் மற்றும் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறான இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும் என எதிர்பார்த்திருக்க முடியாது.
“தடங்கல் வரும்போது புறமுதுகிட்டு ஓடிவிடாமல் மக்களால் கொடுக்கப்பட்ட ஆணைக்கு அனைத்து மக்களின் உரிமைகளையும் நினைவில் கொண்டு சமூக ஒப்பந்தமான அரசமைப்பை உருவாக்க வேண்டும்.
“இன ரீதியான சிக்கல்கள் நாட்டில் ஏற்பட்டிருக்காவிட்டால் எவ்வளவு சுபீட்சமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்போம். எனினும், இனரீதியான குழப்பம் ஏற்பட்ட நாட்டில் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில், சகலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அடிப்படைச்சட்டம், இனங்களுக்கிடையிலான சமூக ஒப்பந்தமாக அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
இது விடயத்தில் அரசாங்கம் பூசி மெழுகாது, அடிப்படையில் மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறாது செயற்பட வேண்டும். புதிய அரசமைப்புத் தேவையில்லையென சிலர் பறைசாற்றுகின்றனர்.
“பொறுப்பான அரசாங்கம் இந்த விடயத்திலிருந்து பின்வாங்கக் கூடாது, பின்வாங்கவேண்டிய அவசியமும் கிடையாது. எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்களும் முழுமையான ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தில் ஆயுதமேந்திப் போராடிய மக்கள் விடுதலை முன்னணியினரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை பொறுப்புனர்வுடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“சகலரும் ஒன்று சேர்ந்து செய்யும் விடயம் வெற்றிகாண வேண்டியது அத்தியாவசியமாகும். இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ள முதலாவது சந்தர்ப்பத்தை கிடைத்திருக்கும் ஒரேயொரு சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டோம் என்ற பழிச்சொல்லுக்கு இடமளிக்கக் கூடாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago