Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 02 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
பொதுமன்னிப்பு அல்லது வேறு எந்தப் பொறிமுறையிலாவது, தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அரசியல் கைதிகள், தங்களது விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்காவிட்டால், புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக எச்சரித்துள்ளனர்.
வெலிக்கடை புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலர், தமிழ்மிரருக்கு பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள்,
“அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டமானது, அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்குமானது .
விளக்கமறியல் கைதிகள் 30 பேரும், தண்டனைக் கைதிகள் 27 பேரும், மேன்முறையீட்டுக் கைதிகள் 17 பேரும், ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவருமாக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 76 அரசியல் கைதிகள், வெலிக்கடை புதிய மகசின் சிறைச்சாலையில்தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், அந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தாது, தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்பட்டு வருகிறோம்.
தண்டனைக் காலங்களைவிட, அதிகமான நாட்கள் சிறைச்சாலையில் இருந்துவிட்டோம். தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமின்றி, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முற்போக்கு அரசியல்வாதிகளும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கதைப்பதற்கு ஊடகங்கள் வழிசெய்ய வேண்டும்.
தமிழீழத்துக்கான விடுதலைப் போராட்டத்தின்போது, புலம்பெயர் அமைப்புகளின் பொருளாதார உதவியே, முதுகெலும்பாக இருந்தது. தற்போது விடுதலைப் போராட்ட வடிவம் மாற்றம் பெற்றுள்ளதால், புலம்பெயர் தமிழர்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களினதும் பிள்ளைகளினதும் கல்வித் தேவைகளுக்காக, பொருளாதார ரீதியாக உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை சந்தித்து ஒன்றரை வருடங்களாகின்றது. அமைச்சர் மனோகணேசனும் முன்பு போல எங்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதில்லை.
ஆயுதப் போராட்டத்தின் தவறுகளிலிருந்து தமிழ் இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக விடுதலைக்காகவும், எங்களது விடுதலைக்காகவும் அவர்கள் போராட வேண்டும்.
அரசியல் கைதிகளின் விவகாரம் தனிப்பட்ட வடக்கு தமிழர்களின் பிரச்சினைகள் இல்லை. வடக்கு, மலையகம், தெற்கு என அனைத்து மாகாணங்களில் உள்ளவர்களும் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே எங்களது விடுதலைக்காக கூட்டாக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
இதன்போது, புலம் பெயர் தமிழ் அமைப்புகளிடம், தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக அவர்களது கோரிக்கை என்ன என்று வினவியமைக்கு, "புலம் பெயர் தமிழர்கள், தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதாக நினைத்துகொண்டு முன்னெடுக்கும் போராட்டம், எங்களது விடுதலையை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. குறிப்பாக, அவர்களின் போராட்டங்களின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொள்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும்." என்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago