Editorial / 2023 நவம்பர் 16 , மு.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 5 பேரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களாக அடையாளம் காணப்பட்ட ராஜபக்ஷ சகோதரர்கள், நாட்டு மக்களுக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென ஏன் உத்தரவிடவில்லையென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ உட்பட முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ,,பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும்.
அத்துடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்.டபிள்யூ. டி.லக்ஷ்மன்,முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர உட்பட மத்திய வங்கியின் நாணய சபையின் உறுப்பினர்கள் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர் குழாம் தீர்ப்பளித்துள்ளது. இந்த குழாமில் ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதேஉயர்நீதிமன்றம்தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்கத்தவறிய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 5 பேரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களென ராஜபக்ஷ சகோதரர்களை அறிவித்த உயர் நீதிமன்றம் இவர்களினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் இவர்கள் நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென ஏன் உத்தரவிடவில்லை?
ராஜபக்ஷ சகோதரர்களிடம் தேவையானவளவுக்கு பணம் உள்ளது. வெளிநாடுகளிலும் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. அந்த பணங்களை வெளிக்கொண்டுவந்தால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்கு தீர்க்க முடியும். நாட்டின் பணம் களவாடப்பட்டதால்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .