2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

“வடக்கு, கிழக்கு ஹர்த்தாலில் 100% கடைகள் மூடப்படவில்லை”

Editorial   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம்  கடைகள் மூடப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஹர்த்தாலை பலவீனமடைய செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் செயற்பட்டுள்ளார்கள் என  தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19)  அன்று இடம்பெற்ற பணச்சூதாட்டத்தை  ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டமூலம்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர்  பேசுகையில்,

எம்மால் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் பற்றி  ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியவர்களும், ஆதரவு வழங்காதவர்களும் பல்வேறு விடயங்களைக் கூறுகின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி   ஆகிய அரசியல் கட்சிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல, வடக்கு, கிழக்கு மாகாண  வர்த்தக சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட பொதுமக்களுக்கும்   நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

முல்லைத்தீவு  இளைஞனின் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோம். இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தால் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை பேச்சாளர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவத்தின் ஊடகப்  பேச்சாளரும், பொலிஸ் ஊடகப்  பேச்சாளரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்தே  ஹர்த்தாலை மதியம் வரை வரையறுக்கத் தீர்மானித்தோம்.

உயிரிழந்த இளைஞனுக்கும், இராணுவத்தினருக்கும் தொடர்புள்ளது. அதனடிப்படையில், இராணுவத்தினர் ஒரு சிலர் கைது செய்யப்பட்டார்கள் என்று  பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.அனைத்து இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டும். ஒரு முகாம் கூட இருக்க கூடாது என்று நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிடவில்லை.

இராணுவத்தின் நிலைப்பாட்டுக்கும், பொலிஸாரின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இராணுவ முகாமுக்குள் வந்த ஒரு இளைஞனை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததாக இராணுவ ஊடகபி  பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். முகாமுக்குள் அத்துமீறிய வகையில் இவர்கள் சென்றிருந்தால் அவர்களை கைது செய்து பொலிஸில் ஒப்படைத்திருக்க வேண்டும். இவ்விடயத்தில்  சிக்கல் காணப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் பொதுமக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். எம்மை இனவாதியாக சித்திரிக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம்  கடைகள் மூடப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஹர்த்தாலை பலவீனடைய செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் செயற்பட்டுள்ளார்கள். ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யுங்கள் என்று  வலியுறுத்துகிறோம். நாங்கள் ஜனநாயக கொள்கைக்கு அமைவாகவே செயற்படுகிறோம். எமது பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வினையே எதிர்பார்க்கின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X