2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இறுதிக் கிரியை…

Editorial   / 2017 நவம்பர் 18 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எஸ்.எம். ஜீ' என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்களின் இறுதிக் கிரியை, மட்டக்களப்பில் நேற்று (17) மாலை நடைபெற்றது.

வீட்டில் நடைபெற்ற இறுதிக்கிரியைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை (15) காலமானார்.

இலங்கையின் வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.

2002ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய கோபு, அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்றுகளையும் பெற்றார்.

அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு, பத்திரிகைத்துறையில் பல வாரிசுகளை உருவாக்கித்தந்தவர்.

கோபுவின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப் பாராட்டி> தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.

கோபு, பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால், ஸ்ரீ ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார்.

அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ., 'ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை', 'அந்த ஓர் உயிர்தானா உயிர்', 'பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு, 'ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

அன்னாரின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு மாபெரும் இழப்பு என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு, அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் எனப் பலர்  அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், குடும்ப உறவினர்களின் இறுதி அஞ்சலியுரையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .