2025 ஜூலை 23, புதன்கிழமை

உமாஓயா பாதிப்பு; இழப்பீடு கோரி கவனயீர்ப்புப் பேரணி

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

உமாஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், இழப்பீடுகளை வழங்கக் கோரியும், அவர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வெகுவிரைவில் தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், பதுளையில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த மகஜர்களை, சம்பந்தப்பட்டவர்களுக்கு கையளிக்க முயற்சித்த போதிலும், அம் முயற்சி கைகூடவில்லை.

அரச அலுவலகங்கள், ஊவா மாகாண சபை, ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுக்குள் பிரவேசிக்கவோ, பிரவேசிக்க முயற்சிக்கவோ, நிர்வாக முடக்கங்களை ஏற்படுத்தவோ முனையக் கூடாது என்று, பதுளை மற்றும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றங்களால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், பேரணியில் ஈடுபட்டவர்கள் மகஜர் கையளிப்பதை தவிர்த்துக்கொண்டனர்.

இக்கவனயீர்ப்புப் பேரணி எவ்வித முரண்பாடுகளுமின்றி, வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பொலிஸார் பதுளையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றைய  ஆர்ப்பாட்டத்துக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம், தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

பண்டாரவளை பிர​தேச செயலாளர் காரியாலயம் மற்றும் கினிகம எனுமிடத்திலுள்ள அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் ஆகியனவற்றுக்குள், ஆர்ப்பாட்டாளர்கள் நுழைவதற்கு ஏற்பாடு செய்துள்ளனரென பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே, இதுதொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .