2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி

Editorial   / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 எம்.எஸ்.எம்.நூர்தீன் 

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி கோரி காத்தான்குடியில் கவனஈர்ப்பு பேரணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(03) அன்று முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெற்று 35ஆவது வருட ஷுஹதாக்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதன் பின்னர் பிரகடனம் வெளியிடப்பட்டது.  

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின்போது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதியும் நியாயமும் வேண்டி  கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் புதை குழிகள் தோண்டப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படும் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.பேரணியின் இறுதியில் ஷூஹதாக்கள் தின பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

இதன்போது, சிறப்புரையை சம்மேளன தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான சத்தார் நிகழ்த்தினார் பிரகடனத்தை சம்மேளன செயலாளர் மௌலவி ரமீஷ் ஜமாலி வாசித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இந்த பிரகடனம் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை வலியுறுத்தியும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தவும், முஸ்லிம்கள் இழந்த காணிகளை மீள வழங்கவும் வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான காணி பங்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, அரசு உயர் பதவிகளில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட வேண்டும் எனவும் இந்த பிரகடனத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேரணியில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை பிரதிநிதிகள் தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதன்போது, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின்  புகைப்படங்களைத் தாங்கி நின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .