2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் சர்வதேச மகளிர் தினம்

Editorial   / 2026 மார்ச் 12 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச மகளிர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள், புதன்கிழமை (11) அன்றுபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

முன்னதாக, விருந்தினர்கள் புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மகளிர் குழுக்களின் பேண்ட் வாத்திய இசையுடன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மகளிர் குழுக்களின் 'இசையும் அசைவும்' நிகழ்வுடன் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாக, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 19 சாதனைப் பெண்களுக்கு அவர்களின் பணிகளைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ. விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த மகளிர் தின நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி ஏ. அன்ரன் யோகநாயகம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கௌரவ விருந்தினர்களாகப் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி கி. டென்சியா, உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திருமதி பொ. செல்வரஞ்சினி, சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திருமதி சி. தங்கமயில் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர். அத்துடன் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .