
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் பாகிஸ்தான் அணி வெற்றியை மிக அண்மித்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்கள் மாத்திரமே பாகிஸ்தான் அணிக்கு தேவையாகவுள்ளது.
480 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடி வரும் நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சில் 8 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் பிரன்டன் மக்கலம் 39 ஓட்டங்களையும், மார்க் க்ரேக், ஐஸ் சோதி ஆகியோர் தலா 27 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர். ரஹாத் அலி, சுல்பிகர் பாபர், யசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 262 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரொம் லதாம் 103 ஓட்டங்களையும், கூரே அன்டர்சன் 48 ஓட்டங்களையும் பெற்றனர். ரஹாத் அலி 4 விக்கெட்களையும், சுல்பிகார் பாபர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 304 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தபோதும் நியூசிலாந்தை துடுப்பாட அழைக்காமல் பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பாடியது. பாகிஸ்தான் அணி 2 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும், யூனுஸ் கான் 28 ஓட்டங்களையும் பெற்றனர். ஐஸ் சோதி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
முன்னதாக பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 566 ஓட்டங்களை பெற்று தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது. இதில் அஹெமட் ஷெஷாட் 176 ஓட்டங்களையும், யூனுஸ் கான் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் கூரே அன்டர்சன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.