
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2013ஆம்/ 2014ஆம் பருவ காலத்திற்க்கான சிறந்த கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் வீரராகவும் இவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரராக தென் ஆபிரிக்கா அணியின் தலைவர் வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச் சிறந்த டுவென்டி டுவென்டி பெறுதிக்கான விருதைப் பெற்றுள்ள அதேவேளை இங்கிலாந்து வீரர் கரி பலன்ஸ் சிறந்த அறிமுக வீரர் தனதாக்கிக்கொண்டார். இங்கிலாந்து அணியின் வீராங்கனை சாரா ரெய்லர் சிறந்த வீராங்கனையாகவும், அவுஸ்திரேலியாவின் மெக் லன்னிங் சிறந்த டுவென்டி டுவென்டி வீராங்கனையாகவும் தெரிவாகியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் பீற்றர் மொமெசன் துணை அங்கத்துவ நாடுகளுக்கான சிறந்த வீரராகவும், சிறந்த வீரருக்கான மக்கள் தெரிவு விருதை இந்தியாவின் புவனேஸ்வர் குமார் பெற்றுக் கொண்டார், சிறந்த நடுவருக்கான விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ பெற்றுக்கொண்டார்.
சிறந்த கனவான்தன்மை விருது இங்கிலாந்தின் கத்தரின் பிரிண்டுக்கு வழங்கப்பட்டது. தவறான ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட வீராங்கனையை மீள துடுப்பாட அழைத்தமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுளளது.
இந்த விருதுகளுடன் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணியில் அஞ்சலோ மத்தியூசின் தலைமையில் டேவிட் வோனர், கேன் வில்லியம்சன், குமார் சங்ககார, வில்லியர்ஸ், ஜோ ரூட், மிச்சல் ஜோன்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட், டேல் ஸ்டைன், ரங்கன ஹேரத், ரிம் சௌதீ ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். ரொஸ் ரெய்லர் 12 வது வீரராக இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் டோனியின் தலைமையின் கீழ் மொஹமட் ஹபீஸ், குயின்டன் டி கொக், விராத் கோலி, ஜோர்ஜ் பெய்லி, வில்லியர்ஸ், டுவைன் பிராவோ, ஜேம்ஸ் போல்க்னர், டேல் ஸ்டைன், மொஹமட் ஷமி, அஜந்த மென்டிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோஹித் ஷர்மா 12ஆவது வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார்.