.jpg)
பிரேஸில் நாட்டின் தேசிய கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரான லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி, வரி சர்ச்சை ஒன்றில் அகப்பட்டுள்ளார். போர்த்துக்கல் நாட்டவரான இவர் 9.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வரி கட்டாமல் மறைத்துள்ளார் என குற்றம் சாட்டி விசாரணைகளை போர்த்துக்கல் நாட்டின் மத்திய குற்றப் புலனாய்வு மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக பிரேஸில் அணியின் தயார்ப்படுத்தல்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகக்கிண்ணம் ஆரம்பிக்கப்பட ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் விசாரணை கடுமைப் படுத்தப்பட்டால் நிச்சயம் பிரேஸில் அணி பாதிப்புகளை சந்திக்க நேரிடும். 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல் தேசிய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக ஸ்கொலாரி கடைமையாற்றிய போதே இந்த சம்பவம் நடைபெற்றதாக போர்த்துக்கல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பணப் பரிமாற்றம் வெளிநாடுகளில் நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்று இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்க அரச அதிகாரிகளிடம் இந்த விசாரணைக்கு உதவுமாறு போர்த்துக்கல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தான் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவில்லை எனவும் தான் குற்றமற்றவன் எனவும், தான் வரி கட்டியமைக்கான சகல ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் தேவையெனின் அதிகாரிகளை வந்து பார்வையிட தான் அழைப்பதாகவும் ஊடக அறிக்கை மூலம் பிரேஸில் நாட்டின் தேசிய கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரான லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி அறிவித்துள்ளார். இவற்றை தாண்டியும் அப்படி ஒரு பிரச்சினை இருக்குமென்றால் அது தன்னால் செய்யப்பட்டதாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.