
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்களினால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோர்ஜ் பெய்லி 39 ஓட்டங்களையும், மனன் வொஹ்ரா 36 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. இதில் லென்டி சிம்மொன்ஸ் 61 பந்துகளில் 14 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார். 2014ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெறப்பட்ட முதலாவது சதம் இதுவாகும். ரோஹித் ஷர்மா 18 ஓட்டங்களைப் பெற்றார். போட்டியின் நாயகனாக லென்டி சிம்மொன்ஸ் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் 9 இல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளனர்.