.jpg)
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இந்தப் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் 350 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் 24 ஓட்டங்களை சாம் ரொப்சன் பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் தம்மிக்க பிரசாத் 4 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். முன்னதாக இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 457 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் டெஸ்ட் போட்டியில் பெற்ற சிறந்த ஓட்டப் பெறிதியான 160 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 79 ஓட்டங்களையும், குமார் சங்ககார 55 ஓட்டங்களையும் பெற்றனர்.ரங்கன ஹேரத் 48 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை மத்தியூஸ் உடன் இணைந்து 9 வது விக்கெட் இணைப்பாட்டமாக 149 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். பந்துவீச்சில் லியாம் பிளங்கட் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்களையும், மூயேன் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 79 ஓட்டங்களையும் , தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியாம் பிளங்கட் 5 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 368 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாம் ரொப்சன் 127 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 74 ஓட்டங்களையும், இயன் பெல் 67 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சமின்ட எரங்க, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்தில் வைத்து ஒன்றுக்கு மேற்ப்பட்ட டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்ட தொடர்களில் இலங்கை அணி இதுவரை தொடர் வெற்றியைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.