2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணம்: பிரேசில், சில்லி, நெதர்லாந்து, மெக்சிகோ அணிகள் இரண்டாம் சுற்றில்

A.P.Mathan   / 2014 ஜூன் 24 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் குழு நிலைப் போட்டிகளின் இறுதிக் கட்டம் நேற்று ஆரம்பமானது. இதன்படி குழு B இல் இருந்து நெதர்லாந்து, சில்லி அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. ஸ்பெயின், அவுஸ்திரேலியா அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளன. குழு A இல் இருந்து பிரேசில், மெக்சிகோ ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள அதேவேளை, கமரூன், குரேசியா ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளன.
 
நேற்று இடம்பெற்ற போடிகளில் நெதர்லாந்து அணி, சில்லி அணியை 2 இற்கு 0 என வெற்றி பெற்றது. முதல் கோலை 77ஆவது நிமிடத்தில் லெரொரி பெர் அடித்த அதேவேளை, இரண்டாவது கோலை மெம்பிஸ் டெபெய் 92ஆவது நிமிடத்தில் அடித்தார். போட்டியின் நாயகனாக நெதர்லாந்து அணியின் ஆயன் ரொபன் தெரிவு செய்யப்பட்டார். 
 
இரண்டாவது போட்டி, முதல் போட்டி நடைபெற்ற அதே நேரத்தில் நடைபெற்றது. ஸ்பெயின் அணியானது அவுஸ்திரேலியா அணியை 3 இற்கு 0 என வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணி சார்பாக டேவிட் வியா 36ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்த அதேவேளை, பெர்னாண்டோ டொரஸ் 69ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், ஜுஆன் மாட்டா 82ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்தனர். போட்டியின் நாயகனாக டேவிட் வியா தெரிவு செய்யப்பட்டார். 
 
குழு B இல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று நெதர்லாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சில்லி அணி இரண்டாமிடத்தையும், ஒரு வெற்றியைப் பெற்று 3 புள்ளிகளுடன் ஸ்பெயின் அணி மூன்றாமிடத்தையும், வெற்றிகள் எதையும் பெறாத அவுஸ்திரேலியா அணி நான்காமிடத்தையும் பெற்றுள்ளன.
 
குழு A இற்கான போட்டி பிரேசில், கமரூன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் அணி 4 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரேசில் அணி சார்பாக முதல் கோலை நெய்மார் 17ஆவது நிமிடத்தில் அடித்தார். 26ஆவது நிமிடத்தில் கமரூன் அணியின் ஜோயல் மடிப் அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. 34ஆவது நிமிடத்தில் நெய்மார் அடித்த கோல் மூலம் பிரேசில் அணி மீண்டும் முன்னிலை பெற்றது. பிரெட் 49ஆவது நிமிடத்திலும், பெர்நான்டினோ 84ஆவது நிமிடத்திலும் அடுத்த இரண்டு கோல்களையும் பிரேசில் அணிக்காக அடித்தனர்.  
 
இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி குழு A இல் 7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. போட்டியின் நாயகனாக நெய்மார் தெரிவானார். 
 
இன்னுமொரு போட்டி குரேசியா, மெக்சிகோ அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மெக்சிகோ அணி 3 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று குழு A இல் 7 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்று  அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 72 நிமிடங்கள் வரை கோல்கள் அடிக்கப்படாத இந்தப் போட்டியில் 15 நிமிடங்களுக்குள் 4 கோல்கள் அடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
ரபேல் மார்க்கஸ் மெக்சிகோ அணி சார்பாக முதல் கோலை 72ஆவது நிமிடத்தில் அடித்தார். இரண்டாவது கோலை 75ஆவது நிமிடத்தில் அன்று குஆர்டுடோ அடித்த அதேவேளை ஜேவியர் ஹெர்னாண்டஸ் 85ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார். 87ஆவது நிமிடத்தில் குரேசியா வீரர் இவன் பெரிசிக் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இந்தப் போட்டியின் நாயகனாக மெக்சிகோ வீரர் ரபேல் மார்க்கஸ் தெரிவானார். குழு A இல் குரேசியா அணி 3 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும், கமரூன் அணி புள்ளிகள் எதையும் பெறாமல் நான்கமிடத்தையும் பெற்றன.
 
நிறைவடைந்துள்ள குழு A மற்றும் குழு B போட்டிகளின் படி இரண்டாவது சுற்றில் பிரேசில், சில்லி அணிகள் மோதவுள்ள அதேவேளை மெக்சிகோ, நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .