2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கை அணி ஒரு பந்து மீதமிருக்க தொடரைக் கைப்பற்றியது

A.P.Mathan   / 2014 ஜூன் 25 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1 இற்கு 0 என்ற ரீதியில் கைப்பற்றியது. போட்டியை சமப்படுத்த இங்கிலாந்து அணி போராடிய போதும் முடியாமல் போனது. போட்டி நிறைவுக்கு வர 1 பந்து மாத்திரம் மீதமிருந்த வேளையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்ங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்தது. 
 
போட்டியின் இறுதி நாளான நேற்று 5 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் என்ற நிலையில் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி நேற்று 89.5 ஓவர்களை எதிர்கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மூயேன் அலி ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், ஜோ ரூட் 31 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் தம்மிக்க பிரசாத் 5 விக்கெட்களையும், ரங்கன ஹேரத் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
முன்னதாக இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 457 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் டெஸ்ட் போட்டியில் பெற்ற சிறந்த ஓட்டப் பெறிதியான 160 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 79 ஓட்டங்களையும், குமார் சங்ககார 55 ஓட்டங்களையும் பெற்றனர்.ரங்கன ஹேரத் 48 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை மத்தியூஸ் உடன் இணைந்து 9 வது விக்கெட் இணைப்பாட்டமாக 149 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். 
 
பந்துவீச்சில் லியாம் பிளங்கட் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்களையும், மூயேன் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 79 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியாம் பிளங்கட் 5 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும்  இழந்து 368 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாம் ரொப்சன் 127 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 74 ஓட்டங்களையும், இயன் பெல் 67 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சமின்ட எரங்க, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.  
 
ஒன்றிற்கு மேற்ப்பட்ட போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர் ஒன்றை இலங்கை அணி இங்கிலாந்தில் வைத்து வெற்றி பெற்றுள்ளமை இதுவே முதற் தடவையாகும். இந்தப் போட்டியின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணியின் தொடர் நாயகனாக அஞ்சலோ மத்தியூசும், இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக ஜேம்ஸ் அன்டர்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .