2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணம்: இத்தாலி அணி வெளியேறியது

A.P.Mathan   / 2014 ஜூன் 25 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இருந்து பலமான, முன்னணி அணியான இத்தாலி வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று குழு C மற்றும் குழு D அணிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில் குழு D இன் போட்டியில் இத்தாலி, உருகுவே அணிகள் மோதின. வெற்றி பெறும் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் போட்டி நடைபெற்றது. மிகுந்த விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் உருகுவே அணி வெற்றி பெற்று, அடுத்த சுற்று வாய்ப்பை பெற்ற அதேவேளை, இத்தாலி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. 
 
நான்கு தடவைகள் உலக சம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலி அணி, 2006ஆம் ஆண்டு சம்பியன் ஆகும். இருப்பினும் அதனைத் தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களிலும் தொடர்ச்சியாக இத்தாலி அணி முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. டியாகோ கோடின் உருகுவே அணி சார்பாக 81ஆவது நிமிடத்தல் கோலை அடித்தார். போட்டியின் நாயகனாக இத்தாலி அணியின் கோல் காப்பாளர் ஜியான்லுஜி புப்போன் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 
 
அதேநேரத்தில் நடைபெற்ற கொஸ்டரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இந்த சமநிலை முடிவின் மூலம் கொஸ்டரிக்கா அணி குழு D இல் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. இங்கிலாந்து அணி ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றியைத் தானும் பெறமுடியாமல் நாடு திரும்பவுள்ளது. போட்டியின் நாயகனாக கொஸ்டரிக்கா அணியின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் தெரிவானார். 
 
குழு D இல் இரண்டாமிடத்தை 6 புள்ளிகளுடன் உருகுவே அணி பெற்ற அதேவேளை 3 புள்ளிகளைப் பெற்ற இத்தாலி அணி மூன்றாமிடத்தையும், 1 புள்ளியைப் பெற்ற இங்கிலாந்து அணி நான்கமிடத்தையும் பெற்றுள்ளன. 
 
குழு C இற்கான போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்றன. கொலம்பியா அணி மட்டும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியிருந்த நிலையில் அடுத்த மூன்று அணிகளுக்கும் வாய்ப்புக்கள் இருந்தன. கொலம்பியா அணி 4 இற்கு 1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. ஜப்பான் அணி 1 புள்ளியுடன் நான்கமிடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இந்தப் போட்டியின் முதல் கோலை ஜுவான் கியுட்ரடோ பெனால்டி உதை மூலம் பெற்றுக் கொண்டார். சிஞ்சி ஒகசாகி 45 நிமிடத்தில் ஜப்பான் அணிக்காக அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. கொலம்பியா அணி சார்பாக ஜக்சன் மார்டினஸ் 55ஆவது நிமிடத்திலும், 82ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்களை அடித்தார். ஜேம்ஸ் ரொட்ரிகஸ் 90ஆவது நிமிடத்தில் நான்காவது கோலை அடித்தார். போட்டியின் நாயகனாக ஜக்சன் மார்டினஸ் தெரிவானார். 
 
அடுத்த போட்டி கிரீஸ் ஐவரி கோஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. சமநிலை முடிவு அடுத்த சுற்றுக்கு போதும் என்ற நிலையில் விளையாடிய ஐவரி கோஸ்ட் அணி தோல்வியடைந்ததன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. கிரீஸ் அணி 2 இற்கு 1 என வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இந்தப் போட்டியில் முதல் கோலை கிரீஸ் அணியின் அன்றியாஸ் சமரிஸ் 45ஆவது நிமிடத்தில் அடித்தார். வில்ப்ரைட் போனி 74ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. 90ஆவது நிமிடத்தில் ஜோர்ஜியோஸ் சமராஸ் அடித்த பனால்டி கோல் மூலம் கிரீஸ் அணி வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக ஜோர்ஜியோஸ் சமராஸ் தெரிவானார். இரண்டாவது சுற்றுக்கு கிரீஸ் அணி முதற் தடவையாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐவரி கோஸ்ட் அணி 3 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும், 1 புள்ளியைப் பெற்ற ஜப்பான் அணி நான்காமிடத்தையும் குழு D இல் பெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .