.jpg)
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் குழு நிலைப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. குழு G மற்றும் குழு H போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வருட தொடரில் முதல் சுற்றுப் போட்டிகளில் இருந்து முக்கிய அணிகள் பல வெளியேறி இருந்தன. அந்தப் பட்டியலில் போர்த்துக்கல் அணியும் இணைந்துள்ளது. ஐரோப்பிய அணிகளே இவ்வாறு வெளியேறிய அணிகளாக காணப்படுகின்றன.
குழு G அணிக்கான போட்டிகளில் ஒரு போட்டியில் ஜேர்மனி, அமெரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜேர்மனி அணி 1 இற்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று குழு G இல் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது. அமெரிக்கா அணி தோல்வியடைந்த போதும் குழு G இல் நான்கு புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது. ஜேர்மனி அணி சார்பாக தோமஸ் முல்லர் 55ஆவது நிமிடத்தில் கோலை அடித்தார். போட்டியின் நாயகனாகவும் அவரே தெரிவானார்.
குழு G இன் மற்றைய போட்டியில் போர்த்துக்கல் அணி, கானா அணியை 2 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்ற போதும் கோல் வித்தியாசத்தில் மூன்றாமிடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. 31ஆவது நிமிடத்தில் கானா வீரர் போயி அடித்த சொந்த கோல் மூலம் போர்த்துக்கல் அணி முன்னிலை பெற்றது. அஷமோவா ஜியான் அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. 80ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல் மூலம் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டியின் நாயகனாக தெரிவானார். கானா அணி குழு G இல் 1 புள்ளியைப் பெற்று நான்கமிடதைப் பெற்றது.
குழு H இன் அணிகளான தென் கொரியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான போட்டியில் பெல்ஜியம் அணி 1 இற்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று குழு H இல் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது. பெல்ஜியம் அணி சார்பாக ஜான் வேர்டஞ்சன் கோலை அடித்து போட்டியின் நாயகனாக தெரிவானார். தென் கொரியா அணி இந்தக் குழுவில் 1 புள்ளியைப் பெற்று நான்கமிடத்தைப் பெற்றது.
குழு H இன் இன்னுமொரு போட்டியில் அல்ஜீரியா -ரஷ்யா அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்புக்களுடன் மோதின. இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்தன. இதன் மூலம் அல்ஜீரியா அணி 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது. ரஷ்யா அணி 2 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தைப் பெற்றது. ரஷ்யா அணியின் வீரர் அலக்சாண்டர் கொகரின் 6ஆவது நிமிடத்தில் கோலை அடித்தார். இஸ்லாம் ஸ்லிமானி 60ஆவது நிமிடத்தில் கோலை அடித்த போட்டியை சமன் செய்தார். போட்டியின் நாயகனாகவும் அவரே தெரிவானார். அல்ஜீரியா அணி முதற் தடவையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரு குழுக்களின் முடிவுகளின் படி இரண்டாவது சுற்றில் ஜேர்மனி அணியானது அல்ஜீரியா அணியை எதிர்த்து விளையாடவுள்ள அதேவேளை, பெல்ஜியம் அணியானது அமெரிக்கா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.