
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை அணிக்கு இந்தப் போட்டி மிக முக்கிய போட்டியாக அமையவுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். தனது சொந்த மைதானத்தில் விளையாடும் மஹேல ஜெயவர்தனவின் பிரியாவிடை நிகழ்வுகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடரில் 1 இற்கு 0 என்ற ரீதியில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது. வானிலை இந்தப் போட்டிக்கு பெரும் தடையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமநிலை முடிவு முடிவு கிடைத்தாலும் இலங்கை தொடரைக் கைப்பற்றிக்கொள்ளும். ஆனாலும் மஹேல ஜெயவர்தன வெற்றியுடன் ஓய்வு பெற வேண்டும் என இலங்கை அணி எதிர்பார்க்கும். மஹேல ஜெயவர்தன தனக்கு ராசியான மைதானத்தில் அதிக ஓட்டங்களை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இலங்கை அணி சார்பாக சில மாற்றங்கள் இன்றைய போட்டியில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உப்புல் தரங்க, கித்ருவான் விதானகே ஆகியோர் நீக்கப்பட்டு திமுத் கருனாரட்ன, லஹிறு திரிமான்னே ஆகியோர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமின்ட எரங்க விளையாடுவதும் சந்தேகமாக உள்ளது. பூரணமாக அவர் குணமடையாத நிலை இருப்பின் சானக்க வெலிகெதெர விளையாடுவார் என நம்பப்படுகின்றது. பாகிஸ்தான் அணி சில மாற்றங்களை முயற்சிக்கும். ஆனாலும் எவ்வாறான மாற்றங்கள் என்பது இறுதி நேரத்தில் செய்யப்படும் என நம்பப்படுகின்றது.