2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா சாம்பியன்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
 
பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – முன்னாள் முதல் நிலை வீராங்கனையும் தற்போது 10ஆவது வரிசையில் இருப்பவருமான கரோலின் வோஸ்னியாக்சி (டென்மார்க்) மோதினார்கள்.
 
இதில் செரீனா 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ந்து 3ஆவது முறையாக கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.
 
ஹெட்ரிக் சாதனை புரிந்த 2ஆவது வீராங்கனை ஆவார். இதற்கு முன்பு கிறிஸ் எவர்ட் 1975–1978ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 4 பட்டம் வென்றார்.
 
அமெரிக்க ஓபன் பட்டத்தை 6ஆவது தடவையாக கைப்பற்றி முத்திரை பதித்தார். இதற்கு முன்பு 1999, 2002, 2008, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பட்டம் பெற்று இருந்தார்.
 
இதன் மூலம் அவர் கிறிஸ்வெர்டை சமன் செய்தார். அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 6 முறை வென்றது சாதனையாக இருந்தது.
 
ஒட்டு மொத்தமாக செரீனா வில்லியம்ஸ் கைப்பற்றிய 18ஆவது கிராண்ட் சிலாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் நவரத்திலோவா (அமெரிக்கா), கிறிஸ் வொர்ட் (அமெரிக்கா) சாதனையை சமன் செய்தார்.
 
இந்த இருவரும் 18 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று 2ஆவது இடத்தில் உள்ளனர். அவர்களுடன் செரீனா இணைந்தார்.
 
ஸ்டெபிகிராப் (ஜேர்மனி) 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார்.
 
செரீனா 33 வயதில் கிராண்ட் சிலாம் பட்டம் வென்றார். இதன் மூலம் அதிக வயதில் பட்டம் வென்ற 2ஆவது வீராங்கனை ஆவார்.
 
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடக்கிறது. இதில் நிஷிகோரி (ஜப்பான்)– சிலிச் (குரோஷியா) மோதுகிறார்கள்.
 
இரட்டையர் பட்டத்தை பாப்பிரையன்–மைக் பிரையன் (அமெரிக்கா) ஜோடி கைப்பற்றியது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .