
பங்களாதேஷ், மேற்க்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்க்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்களை இழந்து 487 ஓட்டங்களைப் பெற்று தமது துடுப்பாட்டத்தை நிறுத்தியது. இதில் க்ரைக் பிரத்வைட் 212 ஓட்டங்களையும், சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களையும், க்றிஸ் கெயில் 64 ஓட்டங்களையும், டரின் ப்ராவோ 62 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் டைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 182 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து இரண்டாவது இன்னிங்சையும் தொடர்ந்து துடுப்பாடியது. முதல் இன்னிங்சில் முஸ்பிகீர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், மொமியுல் ஹக் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுலைமான் பென் 5 விக்கெட்களையும், ஜெர்மைன் பிளக்வூட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இரண்டாம் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 314 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது. முஸ்பிகீர் ரஹீம் 116 ஓட்டங்களையும், மஹமதுல்லா 66 ஓட்டங்களையும், தமீம் இக்பால் 53 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கெமர் ரோச் 4 விக்கெட்களையும், சனூன் கப்ரியல், சுலைமான் பென் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
13 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை விக்கெட் இழப்புகள் இன்றி மேற்க்கிந்திய தீவுகள் அணி பெற்று வெற்றி பெற்றது.
போட்டியின் நாயகனாக க்ரைக் பிரத்வைட் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் அடங்கிய தொடரில் மேற்க்கிந்திய தீவுகள் அணி 1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது.