
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா அணி தொடரை தன் வசப்படுத்தியுள்ளது.
இந்தியா ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட்களினால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் மஹேல ஜெயவர்தன தனது 17 வது சதத்தைப் பெற்றுக்கொண்டார். 118 ஓட்டங்களை பெற்று அவர் ஆட்டமிழந்த அதேவேளை திலகரட்ன டில்ஷான் 53 ஓட்டங்களையும், சீகுகே பிரசன்ன 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்களையும், அக்ஸார் பட்டேல் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் சிகார் தவான் 91 ஓட்டங்களையும், விராத் கோலி 53 ஓட்டங்களையும், அம்பாத்தி ராயுடு 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக நுவான் குலசேகர, திலகரட்ன டில்ஷான், திசர பெரரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். போடிட்யின் நாயகனாக மஹேல ஜெயவர்தன தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் அடங்கிய தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் வென்று தொடரில் இந்தியா அணி 3 இற்கு'0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.