
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 7ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்கு, இலங்கையில் விளையாடும் இறுதிப் போட்டியாக இது விளங்கவுள்ளது.
தனது சொந்த மண்ணில் விளையாடி, சதத்துடன் சொந்த மண்ணுக்கு விடைகொடுத்த சங்கக்கார மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஆகியோருக்கு இன்றைய போட்டி மிக முக்கியமானதாக விளங்கவுள்ளது.
எதிர்வரும் உலகக்கிண்ண தொடருடன் இருவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளனர். சிலவேளை, திலகரட்ண டில்ஷானுக்கும் இப்போட்டி முக்கியமானதாக அமையலாம். அவருக்கும் இலங்கையில் விளையாடும் இறுதிப் போட்டியாக இது அமையலாம்.
குமார் சங்கக்காரவுக்கு இன்றைய போட்டி மற்றுமொரு சாதனைப் போட்டியாகவும் அமையவுள்ளது. இன்னும் 61 ஓட்டங்களைப் பெற்றால், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் வசமிருக்கும் ஒரு வருடத்தின் அதிகூடிய ஓட்டம் என்ற சாதனையை சங்கா முறியடித்துவிடுவார்.
கடந்த 2005ஆம் ஆண்டு முத்தரப்பு (ஒருநாள், டெஸ்ட், டுவென்டி டுவென்டி) போட்டிகள் 46இல் 58 இனிங்ஸ்களில் விளையாடிய ரிக்கி பொன்டிங் - 9 சதங்கள், 15 அரைச்சதங்கள் அடங்கலாக 56.66 என்ற சராசரியில் 2,833 ஓட்டங்களைக் குவித்திருந்தமையே தனிநபர் சாதனையாக இதுவரை இருந்துவருகிறது. குமார் சங்கக்கார இவ்வருடத்தில் 46 முத்தரப்பு போட்டிகளில் 53 இனிங்ஸ்களில் விளையாடி 8 சதங்கள், 17 அரைச்சதங்கள் அடங்கலாக 55.46 என்னும் சராசரியில் 2,773 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இன்னமும் 61 ஓட்டங்களைப் பெற்றால், பொன்டிங்கிடம் இருக்கும் தனிநபர் சாதனை சங்கக்காரவின்வசம் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 14 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார, இதுவரை 389 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி - 20 சதங்கள், 91 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 40.66 என்னும் சராசரியில் 13,339 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
கடந்த 16 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடிவரும் மஹேல ஜயவர்த்தன, இதுவரை 433 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி - 17 சதங்கள், 76 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 33.29 என்னும் சராசரியில் 12,219 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
கடந்த 15 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடிவரும் திலகரத்ன டில்ஷான், இதுவரை 299 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி - 17 சதங்கள், 41 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 38.04 என்னும் சராசரியில் 8,903 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இன்று நடைபெறவுள்ள போட்டி, இவரது 300ஆவது ஒருநாள் சர்வதேசப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. இதில் 4இற்கு 2 என்ற நிலையில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆகையினால் இன்றைய போட்டி, கண்காட்சி போட்டியாகவே கருதப்படுகிறது. பிரியாவிடை போட்டியாகக்கூட இதனைப் பார்க்கமுடியும். ஆகையினால் ஏராளமான ரசிகர்கள், போட்டியைக் கண்டுகளிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.