2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

நியூஸிலாந்துக்கு இலகு வெற்றி

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. நான்காவது நாளிலேயே போட்டியின் முடிவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, சகல விக்கெட்டுகளை இழந்து 441 ஓட்டங்களைக் குவித்தது. நியூஸிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் தலைவருமான பிரண்டம் மக்கலம், 134 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 11 சிக்ஸர்கள், 18 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 195 ஓட்டங்களைக் குவித்து, தரிந்து கௌஸாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பிரண்டம் மக்கலம், 74 பந்துகளில் சதத்தினைப் பூர்த்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷமிந்த ஏரங்க, தம்மிக்க பிரசாத், தரிந்து கௌஸால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முதலாவது இனிங்ஸில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்று நெய்ல் வாக்னரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் த்ரென்ட் போவ்ல்ட் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஸம் மற்றும் ரிம் சௌத்தீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தனது இரண்டாவது இனிங்ஸில் ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காம் நாளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 407 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன 152 ஓட்டங்களைப் பெற்று த்ரென்ட் போவ்ல்ட்டின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டால். அணித்தலைவர் அஞ்சலோ மத்தீவ்ஸ் 66 ஓட்டங்களையும், ஷாமிந்த எரங்க ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் த்ரென்ட் போவ்ல்ட் மற்றும் ரிம் சௌத்தீ ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஸம் மற்றும் மார்க் கிரைக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலகுவான வெற்றியிலக்கினைத் துரத்தி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கான 107ஐ அடைந்தது. 

போட்டியின் நாயகனாக நியூஸிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் தலைவருமான பிரண்டம் மக்கலம் தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .