2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இருந்து கிளார்க் ஓய்வு

Thipaan   / 2015 மார்ச் 28 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாளை (29) நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியுடன் தான் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்னதான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளே முக்கியமானவை. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினாலேயே ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளார்க் தெரிவித்துள்ளார்.

இறுதியாக இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் உபாதை காரணமாக அணியை விட்டு விலகிய மைக்கல் கிளார்க், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என்ற நிலை இருந்தது.

இருப்பினும் மீண்டும் உடற் தகுதியை பெற்று உலகக்கிண்ணத்தில் விளையாடி வருகின்றார். மைக்கல் கிளார்க் ஓய்வு பெற்றதன் பின்னர் ஸ்டீபன் ஸ்மித்துக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படும் என்று நம்பப்படுகின்றது.

இந்திய டெஸ்ட் தொடரில் ஸ்மித் தலைவராக சிறப்பாக செயற்பட்டமையினால் அவருக்கு தலைவர் பதவி தொடர்ந்து வழங்கப்பட வாய்ப்புகளும் உள்ளன.

அவ்வாறு வழங்கப்பட்டால், தான் அவரின் கீழும் சிறப்பாக விளையாடுவேன் என மைக்கல் கிளார்க் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 244 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மைக்கல் கிளார்க் 8 சதங்கள், 57 அரைச் சதங்கள் அடங்கலாக 7907 ஓட்டங்களை 44.42 என்ற சராசரியில் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் 57 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 73 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு தலைவராக செயற்பட்டு 49 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் கிளார்க்.

21 போட்டிகளில் தோல்வியை சந்தித்த அதேவேளை 3 போட்டிகளில் முடிவற்ற போட்டிகளாக கைவிடப்பட்டன.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .