2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பிலெண்டர் தெரிவில் சர்ச்சை; மறுக்கிறது தென்னாபிரிக்கா

A.P.Mathan   / 2015 மார்ச் 31 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் பதினொருவரில் இன அடிப்படையிலான தெரிவாகவே வெரோன் பிலெண்டர் உள்ளடக்கப்பட்டதாக பரவிவரும் கருத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் கிறிஸ் நென்ஸானி மறுத்துள்ளார். அவரது கருத்தையே அணியின் பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவும், அணித்தலைவர் ஏ.பி.டி.வில்லியர்சும் வழிமொழிந்துள்ளனர்.

இனவெறிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சர்வதேச விளையாட்டுக்களிலிருந்து தடைசெய்யப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்து, பல வருடங்களுக்குப் பின்னரே மறுபடியும் சர்வதேச விளையாட்டுத் தளத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. 

அதன் பின்னரான தென்னாபிரிக்க அரசின் அவதானமான நடவடிக்கைகள் விளையாட்டுத் துறையிலும் தொடர்ந்துவருகின்றன. இதன் அடிப்படையிலேயே குறித்த எண்ணிக்கையில் கறுப்பின வீரர்களுக்கும் தேசிய கிரிக்கெட் அணியில் போதிய இடம் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில்தான் அபொட்டுக்குப் பதிலாக அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பிலெண்டருக்கு வழங்கப்பட்டதாகவும் பரவலாக கருத்துக்கள் வெளியிடப்பட்டன. ஆயினும், இந்தக் கருத்துகளை முற்றாக மறுத்திருக்கும் கிறிஸ் நென்ஸானி, ''அணித் தெரிவுகளில் நான் தலையிட்டதில்லை. இனிமேலும் தலையிடும் எண்ணம் இல்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

சிம்பாப்வேயையும், இந்தியாவையும் உலகக் கிண்ணத் தொடரில் எதிர்கொண்டபோது ஹசிம் அம்லா, டுமினி, பெஹார்டியன், பிலெண்டர், இம்ரான் தாஹிர் ஆகிய ஐந்து வெள்ளையர்கள் அல்லாத வீரர்கள் தென்னாபிரிக்க அணியின் விளையாடிய இறுதிப் பதினொருவரில் இடம்பிடித்திருந்தனர். மேற்கிந்தியத்தீவுகளுடனான போட்டியின்போது உபாதை காரணமாக டுமினியும் பிலெண்டரும் விளையாட முடியாமல் போக அபொட் மற்றும் ரொஸொவு இருவரும் விளையாடியிருந்தனர். 

பாகிஸ்தானுடனான போட்டியில் டுமினி அணிக்குத் திரும்பினார். பெஹார்டியனுக்குப் பதிலாக விளையாடியிருக்கவேண்டிய பிலெண்டர் உடல் நிலை சீரில்லாததால் விலக, 
அவரது இடத்தில் அபொட் அந்தப் போட்டியில் இடம்பிடித்தார். பின்னர் யு.ஏ.இ உடனான போட்டியில் முழுமையான உடல் தகுதியோடு பிலெண்டர் அணிக்குத் திரும்பியிருந்தார். அப்போதும் வெள்ளையரல்லாத ஐந்து வீரர்கள், விளையாடிய பதினொருவரில் இடம்பிடித்திருந்தனர். 

''அன்றைய போட்டியில் விளையாடிய அணியை எமது பலம் வாய்ந்த அணியாக உணர்ந்தோம்'' என்கிறார் கிறிஸ் நென்ஸானி. அந்த பதினொருவரில் அபொட் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் டு பிளெஸிஸ்கூட உபாதை காரணமாக இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கவை. 

அன்று விளையாடிய பதினொருவரில், காலிறுதிப் போட்டிக்காக இரண்டு மாற்றங்களை தென்னாபிரிக்கா மேற்கொண்டிருந்தது. டு பிளெஸிஸ் அணிக்குத் திரும்பியிருந்த அதேவேளை, பிலெண்டருக்குப் பதிலாக அபொட் விளையாடியிருந்தார். பிலெண்டர் காயமடைந்திருந்ததாலேயே விளையாடியிருக்கவில்லை என்று உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தபோதும், இலங்கை அணியை எதிர்கொள்ளும் ஒரு நுட்பமாகவே அபொட் உள்வாங்கப்பட்டதாக பின்னர் வெளிவந்த தகவல்கள் குறிப்பிட்டன. 

இலங்கைக்கெதிரான காலிறுதிப் போட்டியில் தனது வேகத்தில் மிரட்டிய அபொட், முதலாவது விக்கெட்டை வீழ்த்தி, இலங்கையின் சரிவை ஆரம்பித்துவைத்தார். அத்தோடு, இந்தத் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 9 விக்கெட்டுக்களை 14.44 என்ற சிறப்பான சராசரியில் வீழ்த்தியிருந்தார். எனவே, அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆயினும், இந்த உலகக் கிண்ணத்தொடரில்  மொத்தமாக 20.3 ஓவர்கள் வீசி, 83 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றிருந்த பிலெண்டர், அபொட்டுக்குப் பதிலாக அணிக்குள் வந்தார். 

நியூசிலாந்தில் வைத்து நியூசிலாந்துக்கு எதிரான அவரது கடந்தகாலப் பெறுபேறுகளும், அவரது ஓரளவு சிறப்பான துடுப்பெடுத்தாடும் ஆற்றலும் அவரை அணிக்குள் கொண்டுவரும் அவசியத்தை ஏற்படுத்தியதாக அணி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். 

நியூசிலாந்து ஆடுகளங்களில் ஆறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கும் பிலெண்டர் 22.62 என்ற சராசரியில் 8 விக்கெட்களைக் கைப்பற்றியிருக்கிறார். 

அரையிறுதிக்கான அணியில் அபொட்டை விலக்கி பிலெண்டரை இணைத்தமை சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், அந்தப் போட்டி முடிந்து இரண்டு தினங்களின் பின்னர் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் விடுத்துள்ள உள்ளூர் கழகங்களுக்கான புதிய வீரர் தெரிவு நடைமுறை விதி மேலும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. 

வீரர்களுக்கான புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்ய இரண்டு வார கால அவகாசமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் வெள்ளையரல்லாத ஆறு வீரர்களை (முன்பு ஐந்தாக இருந்தது) அணியில் இணைக்கவேண்டும் என்றும், அதில் மூன்று ஆபிரிக்க கறுப்பின வீரர்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்றும் புதிய தெரிவு முறையை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறையானது, தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டதென்றும், மாற்றங்களுக்கு போதிய அவகாசமில்லாத நிலையில் அணித் தெரிவில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் இப்போது பரவலான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .