A.P.Mathan / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடவேண்டுமாயின், தனது பந்துவீச்சு, முறையானதுதான் என்பதை சென்னையிலுள்ள ஐசிசியின் பரிசோதனை மையத்தில் சுனில் நரைன் நிரூபிக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரைன், கடந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியபோது அவரது பந்துவீச்சு தொடர்பான சந்தேகத்துக்கு ஆடுகள நடுவர்களால் உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர், ஐசிசியினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை மையம் ஒன்றில் தனது பந்துவீச்சு முறையானதுதான் என நிரூபிக்கவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் - உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் விலகிக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாத ஆரம்பத்தில், ஐசிசியினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் ஒன்றான லோபொரோ பல்கலைக்கழகப் பரிசோதனைக்கூடத்தில் சுனில் நரைன் பல்வேறுவிதமான பரிசோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருந்தார். அந்தப் பரிசோதனை முடிவுகள், சுனில் நரைனின் பந்துவீச்சு முறையானதுதான் என்பதை நிரூபிப்பதாக இருந்ததாகவும், அந்த முடிவுகள் ஐசிசிக்கும் பிசிசிஐக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும், சுனில் நரைன் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடவேண்டுமாயின், சென்னையிலுள்ள ஐசிசியின் பரிசோதனை மையத்தில் தனது பந்துவீச்சு முறையைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, முடிவுகளைப் பெறவேண்டும் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவுறுத்தியுள்ளது.
இது, லோபொரோ பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை நிராகரிப்பதாக உள்ளதாகவும், வேறு பரிசோதனை நிலையங்களையும் ஐசிசி அங்கிகரித்திருக்கும்போது ஏன், சென்னையில் வந்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பிசிசிஐ பிடிவாதமாக இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் எனவும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதுமாத்திரமல்லாது, தாம் இம்முறை நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரை புறக்கணிக்கவேண்டிவரும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் ஜக்மோகன் டால்மியா கருத்துத் தெரிவிக்கையில், 'விதிமுறைகளின்படியே நாம் நடந்துகொள்கிறோம். ஏற்கெனவே ஒரு வீரருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இன்னுமொருவருக்காக மாற்றமுடியாது. இதை நான் கொல்த்தா நைட்ரைடர்ஸ் நிர்வாகத்துக்கு தெவிரித்துள்ளேன்' என்றார்.
அதேபோல, இந்தியக் கிரிக்கெட் சபை நிர்வாகிகளில் ஒருவர் இந்த விடயம் குறித்து தெரிவிக்கும்போது, 'பிசிஐயின் இந்த அறிவிப்பானது லோபொரோ ஆய்வு நிலைய முடிவை புறக்கணிப்பதாக கருதமுடியாது. மாறாக, சென்னை நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு முடிவுகளைப் பெறுவது குறித்த வீரருக்குப் பாதுகாப்பானது. தொடர் ஆரம்பித்து முதலாவது போட்டியிலேயே நடுவர்கள் நரைனின் பந்துவீச்சை முறையற்றதாக அறிவிப்பார்களாயின், அது அவருக்கும், அணிக்கும் ஏன் ஒட்டுமொத்தத் தொடருக்குமே நல்லதல்ல. அவரது பந்துவீச்சுப் பாணி முற்றிலும் முறையானது என உறுதிப்படுத்திக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். அவரைப்போன்ற நட்சத்திர வீரர் ஒருவர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடமுடியாமல் போவதை நாம் விரும்புவோமா?' என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், 'பிசிசிஐ விதிமுறைகளுக்கு அமையவே செயற்படுகிறது. ஒரு தடவை ஒரு வீரரின் பந்துவீச்சு முறை கேள்விக்கு உட்படுத்தப்படுமாயின், சென்னையிலுள்ள பரிசோதனை நிலையத்தில் அவர் தன்னை பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொண்டு நிரூபிக்கவேண்டும் என்ற விதிமுறையை பிசிசிஐ கடைப்பிடிக்கிறது. அதனையே நரைன் விடயத்திலும் வலியுறுத்துகிறோம். அவரது பந்துவீச்சுப் பாணி முறையானதுதான் என்றால், இந்தப் பரிசோதனைக்கு ஏன் நைட்ரைடர்ஸ் நிர்வாகம் மறுக்கிறது என்பது புரியவில்லை' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சுனில் நரைனுடைய பந்துவீச்சுப் பாணி, கள நடுவர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்ட பின்னர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நிர்வாகத்துக்கு எழுதிய உத்தியோகபூர்வ கடிதத்தில், 'நரைன் ஐசிசியினால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பரிசோதனை மையத்திலும் தனது பந்துவீச்சைப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையைப் பெறமுடியும். ஆயினும், சில முக்கிய காரணங்களுக்காக அவர் சென்னை நிலையத்தில் தனது பந்துவீச்சு முறையைப் பரிசோதித்து நிரூபிக்கவேண்டுமென நாம் எதிர்பார்த்தால், அதனை அவர் செய்யவேண்டும்' என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கோடிட்டுக்காட்டியிருந்தது. அதனையே இப்போது விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டுமிருக்கிறது.
ஆயினும், 'அந்தச் சில முக்கிய காரணங்கள்' எவை என தமக்கு தெளிவுபடுத்தவேண்டும் என நைட்ரைடர்ஸ் நிர்வாகமும் வலியுறுத்துவதால் இழுபறி தொடர்கிறது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நிர்வாகமும், சுனில் நரைன் விவகாரத்தில் விடாப்பிடியாக நிற்க வலுவான காரணம் இருக்கிறது. அவர் விளையாடியிருந்த 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஐபிஎல் பருவகாலத்திலும், நைட் ரைடர்ஸ் சம்பியனாகியிருந்ததோடு, தொடரின் நாயகனாக நரைனே தெரிவாகியுமிருந்தார். அதே பருவகாலத்தில், அதே பந்துவீச்சுப் பாணியில் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய நரைன், ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆயினும், இந்த விடயத்தை தனது வாதத்தில் நைட்ரைடர்ஸ் நிர்வாகம் கோடிட்டுக்காட்டத் தவறியிருப்பதாகத் தெரிகிறது.
இறுதியாக நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரில் நைட்ரைடர்சின் கடைசி லீக் போட்டியில் வைத்தே முதல் தடவையாக நடுவர்களால் நரைனின் பந்துவீச்சு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது. அந்தப் போட்டியில் அவர் வீசிய 3 பந்துகள் விதிமுறைகளை மீறிய பந்துவீச்சுக்களாக கள நடுவர்களால் அடையாளப்படுத்தப்பட்டன. அவை மூன்றும் அவரால் சற்று வேகமாக வீசப்பட்ட பந்துகள்.
ஆயினும், அரையிறுதியிலே அவர் வீசிய 24 பந்துகளுமே சந்தேகத்துக்கிடமானவையாக அடையாளப்படுத்தப்பட்டன.
அதனையடுத்த இந்தியாவுக்கான தொடரில் தான் விளையாடப் போவதில்லை என்றும், தனது பந்துவீச்சுமுறையில் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடப்போதாகவும் சுனில் நரைன் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் எவ்வித முக்கிய போட்டிகளிலும் பங்குபற்றவில்லை. முழுமையாக பந்துவீச்சுப் பாணியை முறைப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தார்.
குறிப்பிடத்தக்க போட்டிகளில் விளையாடாதிருந்தபோதிலும் ஆச்சரியமூட்டும் வகையில் அவர் உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அணித்தெரிவு இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் முதல்தர போட்டிகளிலான அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுபேற்றை அவர் பெற்றுக்கொண்டார்.
50 ஓவர்கள் தொடர் ஒன்றின் இறுதிப்போட்டியில் கயானா அணிக்கெதிராக 9 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை விழ்த்தி தனது டிரினிடாட் அன்ட் டுபாகோ அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தார். ஆயினும், அதற்குப்பின்னர் இரண்டு தினங்கள் கழித்து, உலகக் கிண்ண அணியிலிருந்து விலகுவதான அதிர்ச்சியூட்டும் தனது அறிவிப்பை வெளியிட்டார். அவசரகதியில் தனது பந்துவீச்சை சரிசெய்ய முயன்று சிக்கலுக்குள்ளாக விரும்பவில்லை என அவர் தெரிவித்திருந்தார். அவரது இழப்பு நிச்சயம் மேற்கிந்தியத் தீவுகள் அணியை உலகக் கிண்ணத் தொடரில் பாரிய அளவில் பாதித்திருந்தது.
இப்போது, இவ்வளவுகாலமும் பொறுமையாக பயிற்சியில் ஈடுபட்டு, தனது பந்துவீச்சு முறையானதுதான் என நிரூபித்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மீள்வருகைக்கு முயற்சிக்கும் சுனில் நரைனுக்கு பிசிசிஐயின் கெடுபிடி கொஞ்சம் சோர்வைத் தரக்கூடும். ஆயினும், இது அவருக்கான அக்னிப் பரீட்சை எனவே, இதில் வெற்றிபெறுவது அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .