2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஐபிஎல் 2015: மயிரிழையில் சென்னை வெற்றி

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை சுப்பர்கிங்ஸ் அணிக்கும், டெல்லி டார்டெவில்ஸ் அணிக்குமிடையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர்கிங்ஸ் அணி ஓர் ஒட்டத்தால் போராடி வெற்றி பெற்றது.   

முதலில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணியின் கப்டன் டுமினி, சென்னை அணியை துடுப்பெடுத்தாட பணித்தார். சென்னையில் இடம்பெறும் போட்டிகளில் இலங்கையணி வீரர்கள் பங்குபற்றினால் தமிழ்நாட்டிலுள்ள சில தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தும் என்ற காரணத்தால் ஐபிஎல் நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் இடம்பெறும் போட்டிகளில் இலங்கை வீரர்களை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியதுக்கு அமைய டெல்லி அணியினால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மத்தியூஸ் இப்போட்டியில் பங்கேற்கவில்லை.  

சென்னை அணி சார்பாக உலகக்கிண்ண போட்டிகளில் கலக்கிய மக்கலமும், ஸ்மித்தும் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக களம்புகுந்தனர். ஆனாலும் மக்கலம் அதிக நேரம் நிலைக்கவில்லை, இரண்டாவது ஓவரிலேயே கூல்டெர்னையில்லின் பந்துவீச்சில் யுவராஜ்சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரெய்னாவும் அடுத்த கூல்டெர்னையில்லின் ஓவரில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித், டூப்ளிசிஸ், ஜடேஜா, பிராவோ என குறிப்பிட்ட இடைவெளியில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. சென்னையணி சார்பாக ஸ்மித் 34 ஓட்டங்களையும், டூப்ளிசிஸ் 32 ஓட்டங்களையும், டோனி 30 ஓட்டங்களையும் பெற்றனர். டெல்லி அணி சார்பாக கூல்டெர்னையில் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் முன்வரிசை நெகாராவின் பந்துவீச்சில் விக்கெட்களை பறிகொடுத்தது. அல்பி மோர்க்கல் மட்டும் தனியாக நின்று போராடினார். ஆனால் தொடர்ந்து வந்த அணியின் கப்டன் டுமினி, ஐபிஎல்லில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட யுவாராஜ்சிங் ஆகியோர் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்று ஓர் ஒட்டத்தால் தோல்வியடைந்தது. தனித்து நின்று போராடிய அல்பி மோர்க்கல் 55 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்சர் உள்ளடங்கலாக 73 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னையணி சார்பாக நெகாரா 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனாக தெரிவானார்.   

இன்று இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியும், ரோயல் சேலஞ்ஜேர்ஸ் அணியும் மோதவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .