2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

‘அணியை விட்டுச் செல்ல மாட்டேன்”

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கு முன்னர், தமது ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் வரலாற்றில் ஒருமுறை மாத்திரமே 5-0 என வெள்ளையடிக்கப்பட்டிருந்த இலங்கையணி, இவ்வாண்டு உபுல் தரங்கவின் தலைமையில் மூன்று தடவைகள் 5-0 என வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலோ மத்தியூஸ் காயமடைந்திருந்தபோது, தென்னாபிரிக்காவில் உபல் தரங்க தலைமை தாங்கியபோது 5-0 எனத் தென்னாபிரிக்காவிடம் இலங்கை தோற்றிருந்தது. பின்னர், இவ்வாண்டு ஜுலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்ட பின்னர், சொந்த மண்ணில் இந்தியாவிடம் 5-0 எனத் தோல்வியடைந்த இலங்கை, ஷார்ஜாவில் நேற்று இடம்பெற்ற பாகிஸ்தானுக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்து, 5-0 என்றவாறு தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில், கருத்தித் தெரிவித்துள்ள தரங்க, “இது தேர்வாளர்களினதும் இலங்கை கிரிக்கெட் சபையினதும் பொறுப்பாகும். அணியை விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. யார் அணியை முன்னகர்த்துவதென்பதை இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானிக்கும்.

அணித்தலைவராக, தோல்விகளுக்கு பொறுப்பேற்க நான் விரும்புகிறேன். துடுப்பாட்ட வீரர்களும் குறிப்பிட்டளவு பொறுப்பேற்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் தோல்வியடையலாம். ஆனால், ஐந்து போட்டிகளுமல்ல” எனக் கூறியுள்ளார்.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, உஸ்மான் கானின் பந்துவீச்சில், 21 பந்துகளுக்கிடையில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து, இறுதியில், 26.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு, 104 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20.2 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இவ்வாண்டில், 26 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கையணி, நான்கு போட்டிகளில் மாத்திரம் வென்றுள்ளதுடன் குறித்த போட்டியுடன் சேர்த்து தொடர்ச்சியாக 12 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. துடுப்பாட்டமே இலங்கையின் பிரதான பிரச்சினையாகக் காணப்படுகிறது. கடந்த 12 போட்டிகளில், 240 ஓட்டங்களுக்கு மேல் தாண்டாத இலங்கையணி, பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் இரண்டு தடவைகள் மாத்திரமே 200 ஓட்டங்களைத் தாண்டியிருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள தரங்க, ஒரே தவறுகளையே மீண்டும் விடுவதாகவும் கடந்த 15 தொடக்கம் 18 மாதங்களில், துடுப்பாட்டத்தில் தாங்கள் தடுமாறுவதாகவும் தாங்கள் கீழ் மட்டத்திலான அடைவுகளைப் பெறுவதற்கு அதே பிரதான காரணமென்று கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .