2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஆர்சனலை வென்றது செல்சி

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை செல்சி வென்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் செல்சியின் முன்களவீரர் வில்லியன் செலுத்திய பிறீ கிக்கை, அவரின் சக முன்களவீரரான மேஸன் மெளன்ட் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்தியபோதும் அது ஆர்சனலின் கோல் காப்பாளர் பெர்னார்ட் லெனோவின் தொடையில் பட்டுத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், போட்டியின் 13ஆவது நிமிடத்தில் ஆர்சனலின் முன்களவீரர் மெசுட் ஏஸில் செலுத்திய மூலையுதையை, சக முன்களவீரரும், அணித்தலைவருமான பியர் எம்ரிக் உபமேயை நோக்கி ஆர்சனலின் பின்களவீரரான கலும் சேம்பர்ஸ் வழங்கிய நிலையில், அவர் அதைத் தலையால் முட்டிக் கோலாக்கினார்.

இதைத் தொடர்ந்து ஆர்சனலின் இன்னொரு முன்களவீரரான அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, தனதணியின் முன்னிலையை இரட்டிபாக்குவதை நெருங்கி வந்தபோதும், அவரின் உதையை செல்சியின் மத்தியகளவீரரான என்கலோ கன்டே தடுத்திருந்தார்.

இந்நிலையில், போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மேஸன் மெளன்டின் பிறீ கிக்கை பேர்னார்ட் லெனோ தடுக்கத் தவற, மாற்றுவீரராகக் களமிறங்கிய செல்சியின் மத்தியகளவீரரான ஜோர்ஜினியோ அதைக் கோலாக்க கோலெண்ணிக்கையை செல்சி சமப்படுத்தியது.

தொடர்ந்து, அடுத்த நான்காவது நிமிடத்தில், சக முன்களவீரர் வில்லியனிடமிருந்து பெற்ற பந்தை செல்சியின் இன்னொரு முன்களவீரரான தம்மி ஏப்ரஹாம் கோலாக்கியதோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் அணியுடனான போட்டியை, சாடியோ மனே பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்தது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற ஷெஃபீல்ட் யுனைட்டெட்டுடனான போட்டியில், சேர்ஜியோ அகுரோ, கெவின் டி ப்ரூனே பெற்ற கோல்களோடு 2-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் 55 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் லிவர்பூல் காணப்படுகிறது. 42 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 41 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 35 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன. இதில், ஏனைய அணிகளை விட லிவர்பூல் ஒரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .