2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆறுதல் வெற்றிபெறுமா இலங்கை?

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டி, போர்ட் எலிஸபத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோற்றுள்ள இலங்கை, ஏற்கெனவே தொடரை இழந்துள்ள நிலையில், ஆறுதல் வெற்றியொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் அதிக மேம்படுத்தல்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

முக்கியமாக, இத்தொடர் முழுவதுமே இலங்கைக்கு ஆபத்தாந்தவனாகக் காணப்படும் குயின்டன் டி கொக்கின் விக்கெட்டை விரைவாகக் கைப்பற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது.

இதுதவிர, இப்போட்டிக்கும் இத்தொடரின் அடுத்த போட்டிக்கான குழாமில் தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர்களான ஹஷிம் அம்லா, ஜெ.பி டுமினியோடு இளம் துடுப்பாட்டவீரர் ஏய்டன் மார்க்ரமும் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

கடந்த போட்டியில், வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தநிலையில், அவருக்குப் பதிலாக விஷ்வ பெர்ணான்டோவை மீள அணிக்குள் கொண்டு வரும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், பந்துவீச்சையும் விட மோசமானதாகத் துடுப்பாட்டம் காணப்படுகின்ற நிலையில், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மென்டிஸ், ஒஷாட பெர்ணான்டோ ஆகியோரிலொருவர் நீண்ட இனிங்ஸொன்றை ஆட வேண்டிய தேவை காணப்படுகிறது. தவிர, மூன்று மாதங்களுக்குள் உலகக் கிண்ணம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இளம் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அவிஷ்க பெர்ணான்டோ, தன்னை விரைவாக நிரூப்பித்துக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளார்.

இதேவேளை, காயம் காரணமாக குஷல் பெரேரா, தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக அணியில் அஞ்சலோ பெரேரா, பிரியமல் பெரேரா, தனஞ்சய டி சில்வா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மறுபக்கமாக, உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தலாகவே இத்தொடரைக் கருதும் தென்னாபிரிக்கா, நீண்ட நாள் காயத்திலிருந்து மீண்டுள்ள ஜெ.பி டுமினிக்கு, உலகக் கிண்ணத்துக்கு முன்பாக சில போட்டிகளை வழங்க எதிர்பார்க்கின்றது.

இதுதவிர, ஹஷிம் அம்லாவோடு, உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டு ஏய்டன் மார்க்ரமும் குழாமுக்குள் மீண்டும் வந்துள்ளபோதும், றஸி வான் டர் டுஸன் சிறப்பாகச் செயற்படுவதால், தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெறுபவரே அணியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .