Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சனிக்கிழமை (13) ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் முதல் நாள் போட்டிகள் முடிவில், மன்செஸ்டர் சிற்றி, வெஸ்ட் புரோம், சுவான்சீ, ஹள் சிற்றி ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், எவெர்ற்றன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும், மிடில்ஸ்பேர்க், ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும், வட்ஃபோர்ட், சௌதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையயில் முடிவடைந்துள்ளன.
மன்செஸ்டர் சிற்றி, சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம், வெற்றியுடன் தனது முகாமையாளர் பதவியை பெப் குவார்டிலோ தொடங்கியுள்ளதோடு, முன்னாள் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளரான டேவிட் மோய்ஸ் தோல்வியுடன் தனது புதிய முகாமையாளர் பதவியை ஆரம்பித்துள்ளார்.
சிற்றியின் ரஹீம் ஸ்டேர்லிங், பற்றிக் வான் ஆன்ஹொல்ட்டினால் தவறான முறையில் கையாளப்பட போட்டியின் நான்காவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை சேர்ஜியோ அக்ரோ கோலாக்கினார். பின்னர் 71ஆவது நிமிடத்தில் சந்தர்லேண்டின் ஜெர்மைன் டிபோ கோலொன்றைப் பெற்று கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். எனினும் 87ஆவது நிமிடத்தில் சந்தர்லேண்டின் படி மக்னையர் பெற்ற ‘ஒவ்ண் கோல்’ மூலம் சிற்றி வெற்றி பெற்றது. இப்போட்டிக்கான சிற்றியின் அணியில் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போதைய பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி, 1-2 என்ற கோல்கணக்கில், இம்முறை பிறீமியர் லீக்குக்கு தரமுயர்த்தப்பட்ட ஹள் சிற்றியிடம் தோல்வியடைந்திருந்தது. இப்போட்டியில் லெய்செஸ்டர் சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 47ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் றியாட் மஹ்ரேஸ் பெற்றிருந்தார்.
இது தவிர, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், எவெர்ற்றன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. டொட்டென்ஹாம் சார்பாக பெறப்பட்ட கோலை எரிக் லமேலா 59ஆவது நிமிடத்தில் பெற்றிருந்தார்.
ஏனைய போட்டிகளில், பேர்ணிலி அணியை 1-0 என்ற கோல்கணக்கில் சுவான்சீ தோற்கடித்ததுடன், கிறிஸ்டல் பலஸ் அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வெஸ்ட் புரோம் அணி தோற்கடித்ததுடன், மிடில்ஸ்பேர்க், ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும், சௌதாம்டன், வட்ஃபோர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டிகள் சமநிலையில் முடிவடைந்திருந்தன.
19 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago