2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வென்றது இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 29 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

குருனால் பாண்டியாவுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டமை காரணமாக நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்ட இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

இலங்கை சார்பாக கடந்த போட்டியில் விளையாடி உபாதைக்குள்ளான சரித் அஸலங்க மற்றும் அஷேன் பண்டாரவை சதீர சமரவிக்கிரம, ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர். இதில், ரமேஷ் மென்டிஸ் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்தியாவில் கடந்த போட்டியில் விளையாடிய பிறித்திவி ஷோ, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, இஷன் கிஷன், குருனால் பாண்டியா, தீபக் சஹர், யுஸ்வேந்திர சஹாலை ருத்துராஹ் கைகவாட், தேவ்டுட் படிக்கல், நிதிஷ் ரானா, குல்தீப் யாதவ், ராகுல் சஹர், நவ்தீப் சைனி, சேட்டன் சகரியா ஆகியோர் பிரதியிட்டிருந்தனர். இதில், ருத்துராஜ் கைகவாட், தேவ்டுட் படிக்கல் ஆகியோர் இந்தியா சார்பாக அறிமுகத்தை மேற்கொண்டதுடன், சேட்டன் சகரியா, நிதிஷ் ரானா ஆகியோர் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர்.

குருனால் பாண்டியாவுடன் நேரத் தொடர்பாளர்களாக இனங்காணப்பட்ட பிறித்திவி ஷோ, சூரியகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹர்டிக் பாண்டியா, இஷன் கிஷன், யுஸ்வேந்திர சஹால், கிருஷ்ணப்பா கெளதம், தீபக் சஹர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலதிக வீரர்களாக இருந்த இஷான் பொரேல், சந்தீப் வொரியர், அர்ஷ்டீப் சிங்க், ஆர். சாய் கிஷோர், சிமர்ஜீட் சிங் ஆகியோர் இந்தியக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா வேகமாக ஓட்டங்களைப் பெறத் தடுமாறிய நிலையில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஷீகர் தவான் 40 (42), தேவ்டுட் படிக்கல் 29 (23), ருத்துராஜ் கைகவாட் 21 (18) ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில், அகில தனஞ்சய 4-0-29-2, துஷ்மந்த சமீர 4-0-23-1, தசுன் ஷானக 2-0-14-1, வனிடு ஹஸரங்க 4-0-30-1, ரமேஷ் மென்டிஸ் 2-0-9-0, சாமிக கருணாரத்ன 1-0-6-0, தனஞ்சய டி சில்வா 2-0-13-0, இசுரு உதான 1-0-7-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 133 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, மினோத் பானுகவின் 36 (31) ஓட்டங்கள் மூலம் வெற்றியிலக்கை நோக்கிப் பயணித்தது. குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தபோதும், தனஞ்சய டி சில்வாவின் ஆட்டமிழக்காத 40 (34), வனிடு ஹஸரங்கவின் 15 (11), சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 12 (06) ஓட்டங்களோடு, 19.4 ஓவர்களில் வெற்றியிலக்கை இலங்கை அடைந்தது.

பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி 4-0-18-1, புவ்னேஷ்வர் குமார் 4-0-21-1, ராகுல் சஹர் 4-0-27-1, குல்தீப் யாதவ் 4-0-30-2 பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X