2025 ஜூலை 05, சனிக்கிழமை

இன்று 3ஆவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி பல்லேகலவில் இன்றிரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்ற இலங்கையானது தொடரை ஏற்கெனவே இழந்துள்ள நிலையில் இப்போட்டியிலாவது வென்று ஆறுதல் வெற்றியைப் பெறலாம் எனக் களமிறங்குகின்ற நிலையில், முதலிரண்டு போட்டிகளிலும் ஓரளவுக்கு தொடர்ச்சியான பெறுபேற்றை பெற்ற வீரரான குசல் மென்டிஸை இழந்துள்ளது.

இரண்டாவது போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும்போது ஷெகான் ஜெயசூரியாவுடன் குசல் மென்டிஸ் மோதியிருந்த நிலையில், குசல் மென்டிஸுக்கு வலது முழங்காலிலும், ஷெகான் ஜெயசூரியவுக்கு வலது காலுக்கு மேலும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புகளில்லை எனக் கூறப்படுகிறது.

அந்தவகையில், குசல் மென்டிஸை தனுஷ்க குணதிலக பிரதியிடும் நிலையில், குழாமில் வேறு துடுப்பாட்டவீரர்கள் இல்லாதநிலையில், சகலதுறைவீரரான ஷெகான் ஜெயசூரியவை பந்துவீச்சாளரொருவரே பிரதிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் துடுப்பாட்டம் பலவீனமாகவே காட்சியளிக்கின்றது.

இந்நிலையில், குசல் மென்டிஸைத் தவிர இத்தொடரில் தொடர்ச்சியான பெறுபேற்றை வெளிப்படுத்திய நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குஷல் பெரேராவிலேயே இலங்கையின் துடுப்பாட்டம் பிரதானமாகத் தங்கியுள்ளது.

இதேவேளை, இத்தொடரின் இரண்டு போட்டிகளையும் பொறுத்தவரையில் இனிங்ஸின் ஆரம்பத்திலும், முடிவிலும் சிறப்பாக இலங்கை செயற்படுகின்றபோதும், மத்திய பகுதியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றாமையே அவ்வணிக்கு தோல்வியை அளித்த பிரதான காரணமாக இருந்திருந்தது. அவ்வகையில், இக்குறையை நிவர்த்தி செய்ய தமது அணித்தலைவர் லசித் மலிங்கவையே இலங்கை பிரதானமாகத் தங்கியுள்ளது.

இரண்டாவது போட்டியில் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் லக்‌ஷன் சந்தகான் சிறப்பாகச் செயற்பட்டபோதும், குழாமில் வேறு சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் ஷெகான் ஜெயசூரியவை லஹிரு குமார அல்லது லஹிரு மதுஷங்க ஆகியோரே பிரதியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.

மறுபக்கமாக, தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே பெருவிரல் முறிவு காரணமாக தொடரிலிருந்து நியூசிலாந்தின் லொக்கி பெர்கியூசன் விலகியதுடன், இரண்டாவது போட்டியில் றொஸ் டெய்லர் உபாதை காரணமாக விளையாடியிருக்காத நிலையில், அப்போட்டியில் மார்டின் கப்தில், டொம் ப்றூஸ் காயமடைந்திருந்த நிலையில் உடற்றகுதியுடன் இருக்கின்ற 11 வீரர்களை இன்று நியூசிலாந்து களமிறக்குவது சவாலாக இருக்கின்ற நிலையில், இப்போட்டியில் றொஸ் டெய்லர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிகத் துடுப்பாட்டவீரராக ஹமிஷ் ருதபோர்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தொடரை ஏற்கெனவே வென்றுள்ள நியூசிலாந்து, மைதானமானது சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கையில் செத் றான்ஸ் அல்லது ஸ்கொட் குக்லஜினுக்குப் பதிலாக டொட் அஸ்டிலைக் களமிறக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன், மார்டின் கப்தில், டொம் ப்றூஸை ஹமிஷ் ருதபோர்ட், றொஸ் டெய்லர் பிரதியிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமதணியின் மத்திய, பின்வரிசை, பந்துவீச்சு வரிசைகள் திருப்தியாக செயற்பட்டுள்ள நிலையில், முன்வரிசை வீரர்களான கொலின் மன்றோ, டிம் செய்ஃபேர்ட் ஆகியோரிடமிருந்து நியூசிலாந்து ஓட்டங்களை எதிர்பார்க்கும் நிலையில் மீண்டுமொரு முறை நியூசிலாந்தின் நம்பிக்கையளிக்கக்கூடிய வீரராக கொலின் டி கிரான்ட்ஹொம் காணப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .