2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையை எளிதில் வீழ்த்திய அவுஸ்திரேலியா

Editorial   / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அவுஸ்திரேலியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் திங்கட்கிழமை (16) மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 43.3 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்களையும் இழந்து 209 ஓட்டங்கள் எடுத்தது. ஓப்பனிங் ஜோடியை தவிர இலங்கை அணியில் மற்ற வீரர்கள் பெரிதாக விளையாடவில்லை.

ஓப்பனிங் இறங்கிய குசல் பெரேரா மற்றும் பதுன் நிசங்கா ஜோடி 125 ஓட்டங்களை குவித்தது. இந்த இருவரையும் கம்மின்ஸ் அவுட் ஆக்கினார். நிசங்கா 61 ஓட்டங்களும், குசல் பெரேரா 78 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்து பிறகு இலங்கை அணியின் விக்கெட் மளமளவென சரிந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்ததால் 209 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக வீசி ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் 210 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர், ஸ்மித் ஏமாற்றினாலும் மிட்செல் மார்ஷ் சிறப்பான துவக்கம் கொடுத்தார். அரைசதம் கடந்த அவர் 52 ஓட்டங்ளில் ரன் அவுட் ஆனார். இதன்பின் மார்னஸ் லபுசேன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இதனால் அவுஸ்திரேலியா இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. லபுசேன் 40 ஓட்டங்களும், இங்கிலிஸ் 58 ஓட்டங்களும் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட 88 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. மேக்ஸ்வெல் 31 ஓட்டங்களும், ஸ்டாய்னிஸ் 20 ஓட்டங்களும் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் மதுசங்கா அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

5 முறை சாம்பியனான அவுஸ்திரேலியா, முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதேபோல் இரண்டாவது நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வி கண்ட நிலையில், இலங்கையை வென்று நடப்பு உலகக் கோப்பை  தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X