2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 19 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியா வென்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பில் நேற்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான புதிய அணித் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இலங்கை சார்பாக பானுக ராஜபக்‌ஷவும், இந்தியா சார்பாக இஷன் கிஷனும், சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, அவிஷ்க பெர்ணான்டோவின் 33 (35) ஓட்டங்கள் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. எனினும், இந்த இனிங்ஸில் பின்வந்த வீரர்கள் போலவே ஆரம்பத்தைப் பெற்றபோதும் அதைப் குறிப்பிடத்தக்கதாக மாற்றாமல் யுஸ்வேந்திர சஹாலிடம் வீழ்ந்தார்.

இதே பாணியில் மினோத் பானுக 27 (44), பானுக ராஜபக்ஷ 24 (22) ஓட்டங்களுடன் குல்தீப் யாதவ்விடம், தனஞ்சய டி சில்வா 14 (27) ஓட்டங்களுடன் குருனால் பாண்டியாவிடவும், சரித் அஸலங்க 38 (65) ஓட்டங்களுடன் தீபக் சஹரிடமும் வீழ்ந்தனர்.

தொடர்ந்து வந்த தசுன் ஷானகவும் 39 (50) ஓட்டங்களுடன் சஹாலிடம் வீழ்ந்த நிலையில், சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 43 (35), துஷ்மந்த சமீரவின் 13 (07) ஓட்டங்களுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை இலங்கை பெற்றது.

பதிலுக்கு, 263 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, பிறித்திவி ஷாவின் 43 (24) ஓட்டங்கள் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றதுடன், அவர் தனஞ்சய டி சில்வாவிடம் வீழ்ந்தபோதும் தொடர்ந்து வந்த இஷன் கிஷனின் 59 (42) ஓட்டங்கள் மூலம் வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தது.

லக்‌ஷன் சந்தகானிடம் கிஷன் வீழ்ந்ததுடன், தொடர்ந்து வந்த மனிஷ் பாண்டேயும் 26 (40) ஓட்டங்களுடன் டி சில்வாவிடம் வீழ்ந்த போதும், நிலைத்து நின்ற ஷிகர் தவானின் ஆட்டமிழக்காத 86 (95), சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 31 (20) ஓட்டங்களோடு 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்தியா வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக பிறித்திவி ஷா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .