2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.பி.எல்: ஐந்தாவது தடவையாக சம்பியனானது சென்னை

Shanmugan Murugavel   / 2023 மே 30 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியனானது.

அஹமதாபாத்தில் நேற்று முன்தினரவு ஆரம்பமாகி இன்று அதிகாலை முடிவுக்கு வந்த குஜராத் டைட்டான்ஸுடனான இறுதிப் போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி வென்றே சுப்பர் கிங்ஸ் ஐந்தாவது தடவையாக சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சுப்பர் கிங்ஸின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டைட்டான்ஸ், சாய் சுதர்ஷனின் 96 (47), ரித்திமான் சஹாவின் 54 (39), ஷுப்மன் கில்லின் 39 (20), அணித்தலைவர் ஹர்டிக் பாண்டியாவின் ஆட்டமிழக்காத 21 (12) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றது.

டைட்டான்ஸ் இனிங்ஸ் முடிந்தவுடன் மழை பெய்ததுடன் பின்னர் சுப்பர் கிங்ஸின் இனிங்ஸ் ஆரம்பித்து மூன்று பந்துகளில் மழை குறுக்கிட்டு போட்டியானது நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.

இதையடுத்து சுப்பர் கிங்ஸுக்கு டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு வழங்கப்பட்ட நிலையில், டெவோன் கொன்வேயின் 47 (25), ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத 32 (21), அஜின்கியா ரஹானேயின் 27 (13), ருத்துராஜ் கைகவாட்டின் 26 (16), அம்பாதி ராயுடுவின் 19 (08) ஓட்டங்களோடு வெற்றியிலக்கு நோக்கி நகர்ந்தது.

இறுதி இரண்டு பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இரவீந்திர ஜடேஜா ஆறு, நான்கு ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே 5 விக்கெட்டுகளால் சென்னை வென்றது. பந்துவீச்சில் நூர் அஹ்மட் 3-0-17-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக டெவோன் கொன்வேயும், தொடரின் நாயகனாக ஷுப்மன் கில்லும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .