2025 மே 22, வியாழக்கிழமை

ஒலிம்பிக்கில் அவதானிக்கப்பட வேண்டிய தடகள வீரர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 20 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இப்பத்தியானது அதில் அவதானிக்கப்பட வேண்டிய தடகள வீரர்களை நோக்குகிறது.

வழமை போன்று இல்லாது இக்கொரோனா காலத்தில் ஒலிம்பிக் தொடர்பான எதிர்பார்ப்பு குறைவாகவே காணப்படுகின்றபோதும் ஒலிம்பிக் போன்ற ஒரு நிகழ்வே தளர்ந்து போயுள்ள மனங்களை ஊக்கமடையச் செய்யும் கருவியாக நோக்கப்படுகிறது.

அந்தவகையில், வழமை போன்று உலகின் வேகமான மனிதனான உசைன் போல்ட், நீச்சல் ஜாம்பவானான மைக்கல் பெல்ப்ஸ் ஆகியோரின் விளையாடும் பருவகாலம் முடிவடைந்த நிலையில், அடுத்த தலைமுறை வீரர்களே இம்முறை ஒலிம்பிக்கில் தாக்கம் செலுத்தவுள்ளனர்.

இதில் முதன்மையானவராக ஐக்கிய அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ் காணப்படுகின்றார். கடந்த றியோ ஒலிம்பிக்கில் நான்கு தங்கப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்ற பைல்ஸை பலர் நட்சத்திரமாக கருதுகின்றனர். அந்தவகையில், இம்முறையும் இவர் இப்போட்டிகளில் வென்றால், இப்போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களைத் தக்க வைக்கும் இரண்டாவது வீராங்கனையாக காணப்படுகின்றார்.

இதேவேளை, நீச்சல் பக்கம் றியோ ஒலிம்பிக்கில் இரண்டு உலக சாதனைகளுடன் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற கேட்டி லெடக்கி இம்முறையும் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றார். 200, 400, 800 மீற்றர் பிறீஸ்டைல் போட்டிகளுடன் இம்முறை அறிமுகப்படுத்தப்படும் 1,500 மீற்றர் பிறீ ஸ்டைலிலும் 24 வயதான லெடக்கி வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இளைய தலைமுறை வீராங்கனைகளுக்கு மத்தியில் 35 வயதான ஐக்கிய அமெரிக்காவின் அலிஸன் பீலிக்ஸும் போட்டி போடுகின்றார். ஆறு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை கொண்டுள்ள பீலிக்ஸே தடகள வீராங்கனைகளில் இவ்வளவு பதக்கங்களை வென்றவராகக் காணப்படுகின்றார்.

இன்னுமொரு சிரேஷ்ட வீரரான கென்யாவின் எலியுட் கிப்சோஞ்சேயும் அவதானிக்கப்படுவராகக் காணப்படுகின்றார். மரதனோட்டத்தில் ஜாம்பவனான 36 வயதான கிப்சோஞ்சே மாத்திரமே மரதனோட்டத்தை இரண்டு மணித்தியாலங்களுக்குள் பூர்த்தி செய்த ஒருவராகக் காணப்படுகின்றார். கடந்த 2016ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இதேவேளை, குறுந்தூர ஓட்டத்திலும் இன்னொரு சிரேஷ்ட வீராங்கனையான 34 வயதான ஜமைக்காவின் ஷெலி-ஆன் பிறேஸர்-பிறைஸ் சாதிக்கக் காத்திருக்கிறார். 2008, 2012ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்ற பின்னர், 2016ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கங்களையே பெற்ற இவர், ஒலிம்பிக் குறுந்தூரத்தில் பதக்கம் வென்ற வயதானவர் என்ற சாதனையை இம்முறை வெற்றி மூலம் பெறலாம். தவிர, மூன்று தடவைகள் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சாதனையையும் இவர் ஏற்படுத்துவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .