Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்சனலுக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இப்போட்டியை முன்னிலையில் ஆரம்பித்த செல்சி, போட்டியின் 28ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை தமது மத்தியகளவீரர் ஜோர்ஜினியோ கோலாக்க முன்னிலை பெற்றது.
ஆர்சனலின் பின்களவீரர் ஸ்கொட்ரான் முஸ்தாபியால் தவறுதலாக பின்புறமாக வழங்கப்பட்ட பந்துடன் செல்சியின் முன்களவீரர் தம்மி ஏப்ரஹாம் முன்னேறுகையில் ஆர்சனலின் இன்னொரு பின்களவீரர் டேவிட் லூயிஸால் வீழ்த்தப்படவே, பெனால்டி வழங்கப்பட்டிருந்ததுடன், டேவிட் லூயிஸுக்கு சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 10 பேருடன் ஆர்சனல் விளையாடிய நிலையில் செல்சியின் இன்னொரு முன்களவீரரான கலும் ஹட்சன்-ஒடோயின் கோல் கம்பத்தை நோக்கிய உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், அவரின் கோல் கம்பத்தை நோக்கிய மேலுமிரண்டு உதைகள் ஆர்சனலின் கோல் காப்பாளர் பெர்ணார்ட் லெனோவால் தடுக்கப்பட போட்டியின் முதற்பாதியில் செல்சி ஆதிக்கம் செலுத்தியது.
இச்சந்தர்ப்பத்தில், தமது அரைப் பகுதியிலிருந்து முன்னேறிச் சென்ற ஆர்சனலின் முன்களவீரர் கப்ரியல் மார்டினெல்லி, செல்சியின் மத்தியகளவீரர் என்கலோ கன்டேயைத் தாண்டி முன்னேறி வந்த செல்சியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலாகாவைத் தாண்டி போட்டியின் 63ஆவது நிமிடத்தில் கோலைப் பெற கோலெண்ணிக்கையை ஆர்சனல் சமப்படுத்தியது.
இந்நிலையில், கலும் ஹட்சன் ஒடோயிடமிருந்து பெற்ற பந்தை செல்சியின் அணித்தலைவரும் பின்களவீரருமான சீஸர் அத்பிலிகெட்டா கோலாக்கிய நிலையில் மீண்டும் செல்சி முன்னிலை பெற்றது.
எவ்வாறெனினும், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் செல்சியின் இரண்டு பின்களவீரர்களை ஏமாற்றி ஆர்சனலின் அணித்தலைவரும், பின்களவீரருமான ஹெக்டர் பெல்லரின் பெற்ற கோலோடு கோலெண்ணிக்கையை ஆர்சனல் சமப்படுத்திய நிலையில், இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை, ஷெஃபீல்ட்ஷீல்ட் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், சேர்ஜியோ அகுரோ பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற நியூகாசில் யுனைட்டெட்டுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் எவெர்ற்றன் முடித்துக் கொண்டிருந்தது. எவெர்ற்றன் சார்பாக, மொய்ஸே கீன், டொமினிக் கல்வேர்ட்-லூயின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நியூகாசில் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஃபுளோரியன் லெஜெயுனே பெற்றிருந்தார்.
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026