2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சமநிலையில் லிவர்பூல்-யுனைட்டெட் போட்டி

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற லிவர்பூலுடனான போட்டியை சமநிலையில் மன்செஸ்டர் யுனைட்டெட் முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் முதற்பாதியில் லிவர்பூலின் முன்களவீரரான சாடியோ மனே, அதிரடியான நகர்வொன்றை மேற்கொண்டு சக முன்களவீரர் றொபேர்ட்டோ ஃபெர்மினோவிடம் பந்தை வழங்கியபோதும் அவர் அதைக் கோலாக்கத் தவறியிருந்தார்.

இந்நிலையில், லிவர்பூலின் முன்களவீரர் டிவோக் ஒரிஜியை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் விக்டர் லின்டிலொஃப் வீழ்த்தியிருந்தபோதும் அதற்கு தண்டனை எதனையும் மத்தியஸ்தர் மார்டின் அட்கின்ஸன் வழங்கிருக்காத நிலையில், தொடர்ந்து முன்னேறிய மன்செஸ்டர் யுனைட்டெட், தமது முன்களவீரர் டேனியல் ஜேம்ஸ் கொடுத்த பந்தை இன்னொரு முன்களவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கோலாக்க முன்னிலை பெற்றது. காணொளி உதவி மத்தியஸ்தர் மீளாய்விலும் குறித்த கோலானது ஏற்கப்பட்டிருந்ததுடன், தண்டனை எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதையடுத்து சாடியோ மனே கோலைப் பெற்றிருந்தபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பில் சாடியோ மனேயின் கையில் பந்து பட்டிருந்த நிலையில் குறித்த கோல் நிராகரிக்கப்படிருந்தது.

அந்தவகையில், முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் முன்ன்லை வகித்த நிலையில், இரண்டாவது பாதியில் கோல் கம்பத்துக்கு சற்று வெளியே தமது உதைகளை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட்டும், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் ஃபிரட்டும் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில், சக பின்களவீரரான அன்றூ றொபேர்ட்ஸனிடமிருந்து வந்த பந்தை போட்டியின் 85ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய லிவர்பூலின் மத்தியகளவீரர் அடம் லலானா கோலாக்க கோலெண்ணிக்கை சமமானது.

இதன்பின்னர் மாற்றுவீரராகக் களமிறங்கிய லிவர்பூலின் இன்னொரு மத்தியகளவீரரான அலெக்ஸ் ஒக்ஸ்லேட்-சம்பர்லின் உதையானது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றதுடன், மேலதிக நிமிடங்களில் பந்தை பெனால்டி பகுதிகளுக்குள் கையால் அல்லாமல் தோளாலே ஃபிரட் கையாண்டார் என காணொளி உதவி மத்தியஸ்தர் மீளாய்வு தீர்மானிக்க போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .